Sunday, December 31, 2006

முடிவும் தொடக்கமும் 2006-2007


பல வண்ணக் கலவைகளை என் மேல் தெளித்துவிட்டு விடை பெறுகிறது - 2006. எல்லாரையும் போலவே எனக்கும் இந்த ஆண்டு பல மகிழ்ச்சிகளையும் என் கனவுகளையும் நிறைவேற்றித் தந்த ஆண்டு.மிகவும் இனிதாய் 2006 ஆம் ஆண்டு என் நண்பர்கள் கூட்டத்துடன் மைசூரில் ஆரம்பித்தது. இதோ மற்றுமொரு புதிய நண்பர்கள் கூட்டத்துடன் இன்று அமெரிக்கா-கிலிவ்லேண்டில் முற்றுப்பெறுகிறது.

சந்தோசமும் துக்கமும்
கனவுகளும் நினைவுகளும்
வெற்றிகளும் தோல்வியுமாய்
காலம் 2006
பல அரிதாரத்துடன்
சுவடாய் நான் ...


இதொ இன்னுமொரு சில மணித்துளிகளில் திரும்பிப் பெறாத அந்நிமிடங்கள் காணாமற்போய் இன்னும் ஒரு புதிய ஆண்டு 2007 வேறு பல கோணத்தில்.
காத்து இருக்கிறேன் சிறகை விரித்து இன்னமும் பறக்க...

புத்தாண்டில்
நான் நானாய்
நீ நீயாய்
நாம் நாமாய் இருப்போம்..

புலருகின்ற பொழுது புதுப் பொழுதாய்
தினம் தோறும்சந்தோச பூக்களுடன் ...


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..


WISH YOU A HAPPY NEW YEAR 2007 !!!

"Then sing, young hearts that are full of cheer,

With never a thought of sorrow;

The old goes out, but the glad young year

Comes merrily in tomorrow"

--Emily Miller


Saturday, December 30, 2006

ஆத்மா -மகாகவி பாரதி


"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - பாரதி


சொல்லிப்போகவில்லை , செய்துகாட்டியவன்

எட்டயபுரத்தில் உதித்து

கவியாய் மூச்சுவிட்டு

தமிழாய் உலகமெலாம் விரிந்த மகாகவி.

என் தமிழுக்கு காரணமானவன்

அச்சம் தவிர்த்து, ரெளத்திரம் சொல்லி தந்தவன்

தேச பக்தி உணர்த்தி ,

பாரத நாடு எங்கள் நாடு என பறையறிந்து

நானும் ஒர் கனவு ,ஞாலமும் பொய் என காண்பித்தான்

நந்தலாலாவின் தீண்டும் இன்பத்தினையும்

காந்தமாய் உருகும் காதலை காண்பித்த

என் மகா புருஷன்,

என் தாயுமானவன்,

எந்தந்தையுமானவன்...

என் கவி ,மகா கவி , முண்டாசுகாரன்...


சின்னஞ்சிறு வயதுமுதல் உனது பாடல்களை கேட்டு, படித்து, உணர்ந்து உருகி இருந்தாலும் என்னமோ மனதிற்குள் உன்னை முழுவதுமாய்அடக்க முடியவில்லை..


அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம்

எதிர்த்துநின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணிநம்மைத்

தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே.. ..

என்ற பத்தே வரிகளை படித்து விட்டு எனக்கு பாரதி பாடல்கள் தெரியும் என்று சொல்லித் திரிந்த டிரவுசர் போட்ட காலத்திலிருந்து இன்று வரை உன் மீதான பிடித்தம் நீண்டு உன் வரிகளைத் தேடிச் சரணைடைந்து கொண்டுதான் இருக்கிறேன் தினமும்...

டிசம்பர் திங்கள் 11ஆம் நாள் உன் பிறந்த தினம். அன்றே உனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்..ஆனால் உன்னை பற்றி ஒரே நாளுக்குள் ஒரே பதிவுக்குள் என்னால் எழுதமுடியாது என்று தோன்றியதும் அன்று எழுத வில்லை. சரி எவ்வாறு எழுதலாம் என்று நினைத்தே சில வாரங்கள் கழிந்துவிட்டது.. இதோ ஆரம்பித்து விட்டேன்.. இனி உனை பற்றி என் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே...


வாழி பாரதி .. வாழி அவன் கவிதை பல்லாயிரத்தாண்டு...

Wednesday, December 20, 2006

திரு.கஸ்தூரிரங்கனும் ரோம் நகரமும்...ரோம் நகரில் உள்ள புகழ் பெற்ற அறிவியல் கழகத்தின்(Pontifical Acadamy of Science) உறுப்பினராக , இந்திய வானியல் விஞ்ஞானியும் , நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்சுடு சயின்ஸின்(NIAS) இயக்குனரும், இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச்சின்(ISRO) முன்னாள்
சேர்மேனுமான திரு டாக்டர் , கஸ்தூரிரங்கன் அவர்களை போப் 16ஆம் பெனிடிக்ட் நியமித்துள்ளார்.


அறிவியல் கழகம்(Pontifical Acadamy of Science):

ரோம் நகரில் 1603ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 17ஆம் தேதி அறிவியல் கழகம் உருவாக்கப்பட்டு கணிதம்,இயற்பியல்,இயற்கை அறிவியல் ஆகியவற்றில் நடந்து வரும் ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறது.மேற்கண்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை அறிவியல் கழகத்தின் உறுப்பினர்களாக வாடிகன் நிர்வாகம் இன, மத வேறு பாடுஇன்றி, அவர்களது அறிவியல் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு நியமித்து வருகிறது. இக் கழகத்தில் 90 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் 29 பேர் நோபல் பரிசு பெற்ற அறிவியலார்கள்.உறுப்பினர்களாக நியமிக்க படுபவர்கள் இந்த ஆய்வுகழகத்தின் செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வார்கள்.அத்தோடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் மாநாட்டிலும் பங்கு பெறுவார்கள். மேலும் தனது ஆயுட்காலம் வரை உறுப்பினர்களாக நீடிக்கவும் செய்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கஸ்தூரிரங்கன்:

தற்போது இந்த கழகத்தில் பிரபல வானியல் விஞ்ஞானியும்,இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கஸ்தூரிரங்கன் நியமிக்க பட்டுள்ளார்கள்.இந்த கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப் படும் நான்காவது இந்தியர் கஸ்தூரிரங்கன்.இதற்கு முன்பு சர் சி.வி ராமன்,

பேராசியர் எம்.ஜி.கே.மேனன்,பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

கஸ்தூரிரங்கனை பற்றி:
கேரளா-எர்னாகுளத்தில், 1940 ஆம் ஆண்டு பிறந்து 1961-ஆம் ஆண்டு இளங்கலை இயற்பியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்று,1963,முதுகலை இயற்பியலில் பட்டம் பெற்று, வானியலில் ஆராய்ச்சி பட்டத்தினை 1971 ஆம் ஆண்டு பெற்றார்.இந்திய அரசின் பத்ம விபூசன்,பத்ம பூஷன்,பத்ம ஷிரி பட்டங்களை பெற்றுள்ளார்.


என்னடா கஸ்தூரிரங்கன் பத்தி இந்த காட்டு பயன் எழுதுறானெனுதானெ நீங்க நினைக்கிறீங்க.

ஒரு இயற்பியல் மாணவன் என்ற முறையில் நான் சந்தோசம் அடையாம வேற யாரு சந்தோசம் அடைவாங்க? ஆகையால் நான் மிகவும் மகிழ்ந்து எழுதிய பதிவு.


கஸ்தூரிரங்கன் நீடுடி வாழவும் இன்னும் பல சிகரங்களை அடையவும் இறைவனை வேண்டுவோம்.


நன்றி - thatstamil.oneindia.in/news

மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்:
-----------------------------------------------------------

(வேறு சில பதிவுகளுடன் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக என் முண்டாசுகவிஞனை பற்றி அடுத்த பதிவில் )


Saturday, December 09, 2006

எச்சமாய் சிலையும் இரத்தமாய் மனிதனும்...

என்றோ செத்துப் போன
எச்சமான சிலை
தேவனாய்...

இரத்தம் மட்டுமே
குடிக்கும் தலைவன்
பூசாரியாய்...

உயிருடன் ,உணர்வுடன்
அற்ப தொண்டன்
படையலாய்..

பூஜிக்கப் படுகிறது
அரசியல் சனநாயகம்
தினமும்...

ஓம்,ஓம், ஓம்..

Sunday, November 26, 2006

உன்னிலும் என்னிலும்

உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்
என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

@@ குறிப்பு: இந்த வாரம் எதுவும் எழுத தோணவில்லை .ஆதலால் ஒரு மீள் பதிவு. கூளத்தில் டிசம்பர் மாதம் 2005-ல் வெளியிடப் பட்ட என் ஒரே, முதல் பதிவு

Thursday, November 16, 2006

இலவசமாய் இன்னமும்

தேன்கூடு-போட்டி க்காக:

கண் உள்வாங்கி
கழுத்து நீண்டு
முடி உதிர்ந்து
எடை வற்றி
பாயின் ஓரத்தில்
ஒட்டியோ, ஒட்டாமலோ
உருவமற்று

உறுதி படுத்தியது
மூச்சுக் காற்று
மோகமாய் கரைந்து
அவசரமாய் பெற்ற
இலவச மரணத்தை

காமப் பசியின்
செரிக்காத கழிவாய்
இழுத்துக் கொண்டு

புவிதனில்
இலவசமாய்
இன்னமும்...

Tuesday, November 14, 2006

பள்ளிதனை செய்வோம்


"ரோட்டுமேல காரு
காருக்குள்ள யாரு
நம்ம மாமா நேரு னு
சொல்லி திரிந்து
ரோசா பூவும்,
மிட்டாயுமாய் பள்ளிச் சீருடையில்
பக்கத்துவீட்டு வள்ளியும், சுப்பனும்
இதோ நவம்பர் 14
என்று நான் கனவு கானுகையில் ....


இதோ அதை நனவாக்கி என் அருமை தோழர்கள் களத்தில்...
வாழையாய்:
http://www.vazhai.org/index.htm

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!!

குறிப்பு:
பாலபாரதி http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_14.html, வேதா http://ushiveda.blogspot.com/2006/11/blog-post_14.html வின் பதிவுகளை படித்து நான் ஏக்க மூச்சு விட்டுக்கொண்டு இருக்கையில் இந்த பக்கம் நியாபகத்திற்கு வந்தது...பாலபாரதி,வேதாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இதோ பூனைக்கு மணி கட்டியாச்சு.உலகினை மாற்றுவோம், வாருங்கள்..

Sunday, November 12, 2006

தேடித் தொலைந்து...

சிறுத்து பெருத்து
வளைந்து நிமிர்ந்து
வழிந்து ஓடுகிறது -வாழ்க்கை
எதனையோ தேடி...

மக்கியோ சாம்பலாகியோ போவேன்
என்று தெரிந்தும்
ஆரம்பிக்கத்தான் செய்கிறது
என் தேடித் திரியும் வாழ்க்கை
பிறந்தமேனிப் பொழுதுகளிலிருந்து...

புன்னகை இழந்து,
உறக்கமற்று,
பிரபஞ்சத்தின் விலாசம் மறந்து,
தன்னந்தனியாய்
எதையோ தேடியதில்
கரைந்தே காணாமற் போய்விட்டது
என் ஒவ்வொரு மணித்துளியும்...

தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்...

இன்னும் பல தேடுதல்களை
முழுங்கிக் கொண்டு
காத்துக் கொண்டு இருக்கிறது
என் நரையெய்திய கிழப் பருவம்.


தேடித் தொலைகிறேன் நிதமும்...

Wednesday, November 01, 2006

மனிதப் பிண்டங்களாய்..
செஞ்சோலை
மனம் பரப்பும் மொட்டுகளின்
உயிர்ச் சோலை
நாளைய பொழுது நமதாய் வேண்டும் என்ற
நேற்றைய போரின் பிரசவங்கள்
இன்றைய நம்பிக்கைகளாய்...
உடற் கழுவி, உளம் பாரட்டி
ஆடை அணிவித்து,அணிகலன் பூட்டி ,
அள்ளி முகர்ந்திட அன்னை இல்லை...
தோள் சுமந்து, உலகம் உணர்த்தி
வேண்டியன கொடுத்து,வீரம் காட்டி,
பண்பு பாராட்டிட தந்தை இல்லை...
பகிர்ந்தோ ,பாசம் உணரவோ
சண்டையிட்டு சமரசமாய்ப் போகவோ
உடன் பிறப்பும் இல்லை...
ஆனாலும் பிறப்பு அறியப்படுகிறது
அகவை மூண்றிற்கு ஆறும்,
ஆறிற்கு பனிரெண்டும்,
தாயாய்,தந்தையாய்,சகோதரியாய்.
கூடித்திரியும் நட்பாய்...
மனதில் போர் வலி கொண்டு
முகம் புன்னகை ஏந்தி
புலருகின்ற புதுப் பொழுதிற்காய்
கல்யாணி பாடுகையில்
ஒரு மூடக் கூட்டம்
முகாரி பாடிவிட்டு முக்காடிடுகிறது
நான் செய்யவில்லை என்று
புத்தரின் சிரிப்பைக் காட்டி
பார் ஏமாற்றும் ஊளை நரி
குழந்தையின் குருதி குடிக்கையில்...
நாமோ இங்கு
உண்டு, களித்து,
உறங்கி, கொழுத்து,
செத்தொழியும்
மனிதப் பிண்டங்களாய்...பி.கு :
ஆகஸ்ட் 14'2006 ம் நாள் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் செஞ்சோலையில் வாழ்க்கை துவங்கப் படாமலே முற்று பெற்றது...

அக்டோபர் 30'2006. ஜெனிவாவில் நடை பெற்ற புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வி.யாழில் மீண்டும் போர்...

மனம் என்னவோ செய்தது
எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?

நாம் என்ன செய்தோம் இதற்காய்...???
குண்டு வைத்து தகர்த்திட முயற்சி செய்தவனக்கு போரட்டமும்
இலவச கலர் டிவி ,நாற்காலி சண்டையிலும்,
காலம் சரியாத்தான் இருக்கு..

Saturday, October 28, 2006

மழைச் சிநேகம்...

எனக்கு மிகவும் பிடித்தமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்று மழை பெய்தல். மழை பெய்தலும்,அதில் நனைந்திருத்தலும் எத்துனை சுகமான ஒன்று.. இதோ என் நேற்றைய நனைதலுக்கு பின்..

மழை
இரு எழுத்து கடவுள்...

நீ பெய்யப் படும் போதெல்லாம்...
மண் வாசனையுறும்
பயிர் சிலிர்க்கும்
விவசாயி உயிர் பெறுவான்
மழலை கப்பல் விடும் கட்டாந் தரையில்..

உன் வருதலுக்கான
காத்திருத்தல் என்னமோ கஷ்டமானதுதான்
ஆனால் வந்தபின் உண்டாகும் நனைதலில்
கஷ்டம் கரைந்தோடுகிறது
என்மேற் படிந்த புழுதியோடு சேர்ந்து...

குடை பிடித்து மழை நனையாரை
ஏளனம் செய்கிறது என் மனம் இவ்வாறே
" நீர், சேட்டை செய்யாக் குழந்தையைப் போல்"
மழை நனையத்தான்,
ஆம் நனைக்கத்தான் மழை எனவே நனைவீர்...

முன்நெற்றி மழை நீர் முகம் வழிந்து ,
தொண்டைக் குழி நனைத்து,
உடையும் உடலும் ஒட்டி,
மனமில்லாமல் வீடு சேர..
வீதி பார்த்திருந்த அம்மா
கோபம் காட்டி, தலை துவட்டி ,காபி தந்து
என் மழை நனைதலை அவசியப்படுத்தினாள்...

உனக்கும் எனக்கும் உண்டான முதற் சகவாசம்
எப்பொது நிகழ்ந்து இருக்கும்?
விடை தேடுகிறேன்
என் முந்தைய நனைதலிலிருந்து...

அம்மாவின் கருவறைத் தங்குதலிலா
அப்பாவின் தோள் தூங்குதலின் போதா
நட்புகளுடன் கரைந்த பொழுதுகளிலா
இல்லை நான் மட்டும் தனியாய் திரிந்த வேளையிலா!!!
ஆம் விடை தேடுகிறேன்
என் ஒவ்வொரு நனைதலிலும்...

விடை அறிவோனோ இல்லையோ
ஆனால் நனைதல் மட்டும் தொடரும்
என் கல்லறையிலும்...

ஆம் மழை நனைக்கத்தான்!!!

Thursday, October 26, 2006

"அ"னா


"அ" னா... இது என்ன பதிவு, என்ன தலைப்பு, என்று வினவுகிறவர்களுக்கு காரணம் இதுவே. நான் புதியதாய் வலைப்பக்கம் ஆரம்பித்தபின் எழுதும் முதற் பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று எண்ணியபோது வான் புகழ் கொண்ட வள்ளுவன் நினைவுக்கு வந்தான். (அவரா ஏன்டா வம்புக்கு இழுக்குற அப்படினு உங்களுக்கு தோனித்துனா அதுதாங்க உங்க உண்மையான தமிழ் பாசம் அப்படின்கிறது)1330 குறள் தந்து பொது மறை சொன்ன வள்ளுவன் எழுதிய முதல் எழுத்தும் "அ" தான். நான் முதன் முதலாய் எழுதுகோல் பிடித்து எழுதிய எழுத்தும் "அ".ஆதாலாலே, எனது முதல் பதிவுக்கும் இதுவே தலைப்பு. ( ஆகா "என்னமா திங்க் பன்றாண்டா இவன்" அப்படிங்கற உங்க நினைப்ப அப்படியெ பின்னுட்டத்துல போட்டீர்கள் என்றால் எதோ நானும் ஒரு ட்புள் ட்ஜிட்ல பின்னூட்டம் வாங்கி அடுத்த பதிவுக்கு வேலைய ஆரம்பிப்பேன்...)

இந்த "அ" பக்கம்,எனக்கு வலை உலகத்தை அறிமுகப் படுத்தி,எனை எழுதச் செய்த,மீண்டும் எனை எழுத தூண்டிய எனது நண்பர்களுக்கு நன்றி கூறிடவும், அதே வேளையில் நான் எதற்காக, என்ன வெல்லாம் மற்றும் எப்போழுதெல்லாம் எழுதப் போகிறேன் என்று சொல்லிவிடவும் கிடைத்த முதல் பக்கம்.
சரவணா சக்கரவேல், வலைப் பக்கத்தை அறிமுகப் படுத்தி எனை எழுதச் செய்த என் கல்லூரித் தோழன். தோழர் அப்பு (எ) ரபீக் முஹம்மது, தோழி சூர்யா(எ) வனிதா கண்ணன் ஆகிய எனது மற்ற இரு நண்பர்களையும்,எனையையும் சேர்த்து சரவணாவால் ஆரம்பிக்கப் பட்ட கூளம் வலைப் பக்கமே எனது முதல் எழுத்தை வெளிக் காட்டியது..எனதுமுதல் வணக்கங்களும்,நன்றிகளும் கூளம் வலை நண்பர்களுக்கு .ஆனால் பல்வேறு காரணங்களால் என்னால் கூளம் வலை பக்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகவே என் ஒரு பதிவுடன் நின்றுவிட்டது எனது வலைச் சகவாசம்... அந்த நிமிடமே முடிவு செய்யப் பட்டதுதான் எனக்கு விரும்பியதை கால அவகாசம் இன்றி எழுத, நானெ ஒரு தனியாய் ஒரு வலைப் பக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று. ஆனால், எனது போற்றுதற்குரிய " நாளை செய்வோம்" என்ற நற்பண்பு தலை விரித்து தாண்டவம் ஆடி இன்றுடன் ஓராண்டு வரை தள்ளி விட்டது.
இப்போது எப்படி எழுதுகிறென் என்று நினைக்கத்தானெ செய்கீறீர்கள்.அதற்கும் காரணம் உண்டு.திரைகடல் ஓடி திரவியம் தேட அமெரிக்கா வந்த பிறகு,எல்லா தமிழனையும் போல் எனக்கும் தமிழின் பெருமை உரைக்க ஆரம்பித்தது.தமிழோ,அம்மாவின் சமையலொ அது கிடைக்காத போதுதான் அதன் அருமை புரியும்.(என்னடா அம்மா சமையல்னு சொல்றானே னு நீங்க முனகுவது கேட்கத்தான் செய்கிறது.. என்ன பண்ற்து இன்னும் Bachelor life.. அப்படியே கல்யாணம் ஆனாலும் "அம்மா சமையல் அம்மா சமையல்தான்"னு கல்யாணம் செய்த நம் முன்னோர்கள் சொல்றதும் கேட்கத் தான் செய்கிறது).உடனே திரும்பவும் ப்ளாக் தேடி, படித்து, தமிழ் பாராட்டிய போது புதிதாய் வலை நட்பு கிடைத்திட, அவர்களும் நீங்க ஏன் எழுத கூடாது என்று சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் கேட்க , இதோ ஆரம்பிச்சாச்சு நம்ப எழுத்துலக பயணத்தை...இவனப்போய் எழுத சொல்லிய அந்த உயர்ந்த உள்ளங்கள்,புண்ணிய மகாத்மாக்கள் யாருனு கேக்குறீங்களா... வெற யாரும் இல்லங்க , வலைத் தோழி "மழைத்துளி"சுபாவும்,"என் மனம் அலைபாயுதே" திரு.கடல் கணெசன் அவர்களும்தான்...
நன்றிங்கோ....

என்னாடா இவன் சரி கடுப்பேத்தறானெனு நினைச்சீங்கனா...ஆம் நீங்கள் என்ன நானெ அப்படித்தான் நினைக்கிறென்.. ஆகையால்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'" என்று கூறிக்கொண்டு
என்ன வெல்லாம் , எப்போழுதெல்லாம் மற்றும் எதற்காக எழுதப் போகிறேன் என்பதை நேரிடையாய் (வலைவீட்டில்) களத்தில் பார்ப்போம் என எனது நீண்ட பதிவை இத்துடன் முடித்து கொள்கிறேன்...

மணி விலாஸ்

எல்லா இடங்களிலும் எப்படிச் சுற்றித் திரிந்தாலும்,என்னவாகிப் போனாலும் நான் நானகிப் போவது என் வீட்டில் மட்டுமே. ஆம் நான் இங்கு மட்டுமே மிகச் சுதந்திரமாய் , எனது கனவு,காதல்,ஆசை,சந்தோசம்,விருப்பம், வெருப்பு,உண்மை,கோபம்,துக்கம்,எதார்த்தம் என எல்லாவற்றையும் வெளிக்காட்ட முடியும். எனவெ,கனவுகளும் உண்மைகளுமாய் ஆன எனது வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்ய நான் கட்டிய வலை(ப் பக்கம்)வீடு தான் இந்த மணி-விலாஸ்....

நான் கட்டிய இவ் வரைகளற்ற நான்கு சுவர்கள் எனக்கு சுகம்தான்.ஆனால் அதே வேளையில், யாரேனும் ஒருவராவது,எப்போதாவது, ஒரு வேளையாவது இம் மணி-விலாஸில் தங்கி இளைப்பாரிட நேர்ந்தால் நான் மனிதமாகிப் போவேன் என்ற எதிபார்ப்புகளும், நம்பிக்கைகளுமாய் உங்களுக்காக என் வாசற் கதவுகளை திறந்தெ வைத்து வரவேற்பரையில் காத்து கொண்டு இருக்கிறேன் வணக்கங்களுடன்.-மணி ப்ரகாஷ் மு