Sunday, November 26, 2006

உன்னிலும் என்னிலும்

உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்
என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

@@ குறிப்பு: இந்த வாரம் எதுவும் எழுத தோணவில்லை .ஆதலால் ஒரு மீள் பதிவு. கூளத்தில் டிசம்பர் மாதம் 2005-ல் வெளியிடப் பட்ட என் ஒரே, முதல் பதிவு

Thursday, November 16, 2006

இலவசமாய் இன்னமும்

தேன்கூடு-போட்டி க்காக:

கண் உள்வாங்கி
கழுத்து நீண்டு
முடி உதிர்ந்து
எடை வற்றி
பாயின் ஓரத்தில்
ஒட்டியோ, ஒட்டாமலோ
உருவமற்று

உறுதி படுத்தியது
மூச்சுக் காற்று
மோகமாய் கரைந்து
அவசரமாய் பெற்ற
இலவச மரணத்தை

காமப் பசியின்
செரிக்காத கழிவாய்
இழுத்துக் கொண்டு

புவிதனில்
இலவசமாய்
இன்னமும்...

Tuesday, November 14, 2006

பள்ளிதனை செய்வோம்


"ரோட்டுமேல காரு
காருக்குள்ள யாரு
நம்ம மாமா நேரு னு
சொல்லி திரிந்து
ரோசா பூவும்,
மிட்டாயுமாய் பள்ளிச் சீருடையில்
பக்கத்துவீட்டு வள்ளியும், சுப்பனும்
இதோ நவம்பர் 14
என்று நான் கனவு கானுகையில் ....


இதோ அதை நனவாக்கி என் அருமை தோழர்கள் களத்தில்...
வாழையாய்:
http://www.vazhai.org/index.htm

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!!

குறிப்பு:
பாலபாரதி http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_14.html, வேதா http://ushiveda.blogspot.com/2006/11/blog-post_14.html வின் பதிவுகளை படித்து நான் ஏக்க மூச்சு விட்டுக்கொண்டு இருக்கையில் இந்த பக்கம் நியாபகத்திற்கு வந்தது...பாலபாரதி,வேதாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இதோ பூனைக்கு மணி கட்டியாச்சு.உலகினை மாற்றுவோம், வாருங்கள்..

Sunday, November 12, 2006

தேடித் தொலைந்து...

சிறுத்து பெருத்து
வளைந்து நிமிர்ந்து
வழிந்து ஓடுகிறது -வாழ்க்கை
எதனையோ தேடி...

மக்கியோ சாம்பலாகியோ போவேன்
என்று தெரிந்தும்
ஆரம்பிக்கத்தான் செய்கிறது
என் தேடித் திரியும் வாழ்க்கை
பிறந்தமேனிப் பொழுதுகளிலிருந்து...

புன்னகை இழந்து,
உறக்கமற்று,
பிரபஞ்சத்தின் விலாசம் மறந்து,
தன்னந்தனியாய்
எதையோ தேடியதில்
கரைந்தே காணாமற் போய்விட்டது
என் ஒவ்வொரு மணித்துளியும்...

தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்...

இன்னும் பல தேடுதல்களை
முழுங்கிக் கொண்டு
காத்துக் கொண்டு இருக்கிறது
என் நரையெய்திய கிழப் பருவம்.


தேடித் தொலைகிறேன் நிதமும்...

Wednesday, November 01, 2006

மனிதப் பிண்டங்களாய்..
செஞ்சோலை
மனம் பரப்பும் மொட்டுகளின்
உயிர்ச் சோலை
நாளைய பொழுது நமதாய் வேண்டும் என்ற
நேற்றைய போரின் பிரசவங்கள்
இன்றைய நம்பிக்கைகளாய்...
உடற் கழுவி, உளம் பாரட்டி
ஆடை அணிவித்து,அணிகலன் பூட்டி ,
அள்ளி முகர்ந்திட அன்னை இல்லை...
தோள் சுமந்து, உலகம் உணர்த்தி
வேண்டியன கொடுத்து,வீரம் காட்டி,
பண்பு பாராட்டிட தந்தை இல்லை...
பகிர்ந்தோ ,பாசம் உணரவோ
சண்டையிட்டு சமரசமாய்ப் போகவோ
உடன் பிறப்பும் இல்லை...
ஆனாலும் பிறப்பு அறியப்படுகிறது
அகவை மூண்றிற்கு ஆறும்,
ஆறிற்கு பனிரெண்டும்,
தாயாய்,தந்தையாய்,சகோதரியாய்.
கூடித்திரியும் நட்பாய்...
மனதில் போர் வலி கொண்டு
முகம் புன்னகை ஏந்தி
புலருகின்ற புதுப் பொழுதிற்காய்
கல்யாணி பாடுகையில்
ஒரு மூடக் கூட்டம்
முகாரி பாடிவிட்டு முக்காடிடுகிறது
நான் செய்யவில்லை என்று
புத்தரின் சிரிப்பைக் காட்டி
பார் ஏமாற்றும் ஊளை நரி
குழந்தையின் குருதி குடிக்கையில்...
நாமோ இங்கு
உண்டு, களித்து,
உறங்கி, கொழுத்து,
செத்தொழியும்
மனிதப் பிண்டங்களாய்...பி.கு :
ஆகஸ்ட் 14'2006 ம் நாள் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் செஞ்சோலையில் வாழ்க்கை துவங்கப் படாமலே முற்று பெற்றது...

அக்டோபர் 30'2006. ஜெனிவாவில் நடை பெற்ற புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வி.யாழில் மீண்டும் போர்...

மனம் என்னவோ செய்தது
எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?

நாம் என்ன செய்தோம் இதற்காய்...???
குண்டு வைத்து தகர்த்திட முயற்சி செய்தவனக்கு போரட்டமும்
இலவச கலர் டிவி ,நாற்காலி சண்டையிலும்,
காலம் சரியாத்தான் இருக்கு..