Sunday, December 31, 2006

முடிவும் தொடக்கமும் 2006-2007


பல வண்ணக் கலவைகளை என் மேல் தெளித்துவிட்டு விடை பெறுகிறது - 2006. எல்லாரையும் போலவே எனக்கும் இந்த ஆண்டு பல மகிழ்ச்சிகளையும் என் கனவுகளையும் நிறைவேற்றித் தந்த ஆண்டு.மிகவும் இனிதாய் 2006 ஆம் ஆண்டு என் நண்பர்கள் கூட்டத்துடன் மைசூரில் ஆரம்பித்தது. இதோ மற்றுமொரு புதிய நண்பர்கள் கூட்டத்துடன் இன்று அமெரிக்கா-கிலிவ்லேண்டில் முற்றுப்பெறுகிறது.

சந்தோசமும் துக்கமும்
கனவுகளும் நினைவுகளும்
வெற்றிகளும் தோல்வியுமாய்
காலம் 2006
பல அரிதாரத்துடன்
சுவடாய் நான் ...


இதொ இன்னுமொரு சில மணித்துளிகளில் திரும்பிப் பெறாத அந்நிமிடங்கள் காணாமற்போய் இன்னும் ஒரு புதிய ஆண்டு 2007 வேறு பல கோணத்தில்.
காத்து இருக்கிறேன் சிறகை விரித்து இன்னமும் பறக்க...

புத்தாண்டில்
நான் நானாய்
நீ நீயாய்
நாம் நாமாய் இருப்போம்..

புலருகின்ற பொழுது புதுப் பொழுதாய்
தினம் தோறும்சந்தோச பூக்களுடன் ...


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..


WISH YOU A HAPPY NEW YEAR 2007 !!!

"Then sing, young hearts that are full of cheer,

With never a thought of sorrow;

The old goes out, but the glad young year

Comes merrily in tomorrow"

--Emily Miller


Saturday, December 30, 2006

ஆத்மா -மகாகவி பாரதி


"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - பாரதி


சொல்லிப்போகவில்லை , செய்துகாட்டியவன்

எட்டயபுரத்தில் உதித்து

கவியாய் மூச்சுவிட்டு

தமிழாய் உலகமெலாம் விரிந்த மகாகவி.

என் தமிழுக்கு காரணமானவன்

அச்சம் தவிர்த்து, ரெளத்திரம் சொல்லி தந்தவன்

தேச பக்தி உணர்த்தி ,

பாரத நாடு எங்கள் நாடு என பறையறிந்து

நானும் ஒர் கனவு ,ஞாலமும் பொய் என காண்பித்தான்

நந்தலாலாவின் தீண்டும் இன்பத்தினையும்

காந்தமாய் உருகும் காதலை காண்பித்த

என் மகா புருஷன்,

என் தாயுமானவன்,

எந்தந்தையுமானவன்...

என் கவி ,மகா கவி , முண்டாசுகாரன்...


சின்னஞ்சிறு வயதுமுதல் உனது பாடல்களை கேட்டு, படித்து, உணர்ந்து உருகி இருந்தாலும் என்னமோ மனதிற்குள் உன்னை முழுவதுமாய்அடக்க முடியவில்லை..


அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம்

எதிர்த்துநின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணிநம்மைத்

தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே.. ..

என்ற பத்தே வரிகளை படித்து விட்டு எனக்கு பாரதி பாடல்கள் தெரியும் என்று சொல்லித் திரிந்த டிரவுசர் போட்ட காலத்திலிருந்து இன்று வரை உன் மீதான பிடித்தம் நீண்டு உன் வரிகளைத் தேடிச் சரணைடைந்து கொண்டுதான் இருக்கிறேன் தினமும்...

டிசம்பர் திங்கள் 11ஆம் நாள் உன் பிறந்த தினம். அன்றே உனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்..ஆனால் உன்னை பற்றி ஒரே நாளுக்குள் ஒரே பதிவுக்குள் என்னால் எழுதமுடியாது என்று தோன்றியதும் அன்று எழுத வில்லை. சரி எவ்வாறு எழுதலாம் என்று நினைத்தே சில வாரங்கள் கழிந்துவிட்டது.. இதோ ஆரம்பித்து விட்டேன்.. இனி உனை பற்றி என் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே...


வாழி பாரதி .. வாழி அவன் கவிதை பல்லாயிரத்தாண்டு...

Wednesday, December 20, 2006

திரு.கஸ்தூரிரங்கனும் ரோம் நகரமும்...ரோம் நகரில் உள்ள புகழ் பெற்ற அறிவியல் கழகத்தின்(Pontifical Acadamy of Science) உறுப்பினராக , இந்திய வானியல் விஞ்ஞானியும் , நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்சுடு சயின்ஸின்(NIAS) இயக்குனரும், இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச்சின்(ISRO) முன்னாள்
சேர்மேனுமான திரு டாக்டர் , கஸ்தூரிரங்கன் அவர்களை போப் 16ஆம் பெனிடிக்ட் நியமித்துள்ளார்.


அறிவியல் கழகம்(Pontifical Acadamy of Science):

ரோம் நகரில் 1603ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 17ஆம் தேதி அறிவியல் கழகம் உருவாக்கப்பட்டு கணிதம்,இயற்பியல்,இயற்கை அறிவியல் ஆகியவற்றில் நடந்து வரும் ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறது.மேற்கண்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை அறிவியல் கழகத்தின் உறுப்பினர்களாக வாடிகன் நிர்வாகம் இன, மத வேறு பாடுஇன்றி, அவர்களது அறிவியல் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு நியமித்து வருகிறது. இக் கழகத்தில் 90 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் 29 பேர் நோபல் பரிசு பெற்ற அறிவியலார்கள்.உறுப்பினர்களாக நியமிக்க படுபவர்கள் இந்த ஆய்வுகழகத்தின் செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வார்கள்.அத்தோடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் மாநாட்டிலும் பங்கு பெறுவார்கள். மேலும் தனது ஆயுட்காலம் வரை உறுப்பினர்களாக நீடிக்கவும் செய்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கஸ்தூரிரங்கன்:

தற்போது இந்த கழகத்தில் பிரபல வானியல் விஞ்ஞானியும்,இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கஸ்தூரிரங்கன் நியமிக்க பட்டுள்ளார்கள்.இந்த கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப் படும் நான்காவது இந்தியர் கஸ்தூரிரங்கன்.இதற்கு முன்பு சர் சி.வி ராமன்,

பேராசியர் எம்.ஜி.கே.மேனன்,பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

கஸ்தூரிரங்கனை பற்றி:
கேரளா-எர்னாகுளத்தில், 1940 ஆம் ஆண்டு பிறந்து 1961-ஆம் ஆண்டு இளங்கலை இயற்பியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்று,1963,முதுகலை இயற்பியலில் பட்டம் பெற்று, வானியலில் ஆராய்ச்சி பட்டத்தினை 1971 ஆம் ஆண்டு பெற்றார்.இந்திய அரசின் பத்ம விபூசன்,பத்ம பூஷன்,பத்ம ஷிரி பட்டங்களை பெற்றுள்ளார்.


என்னடா கஸ்தூரிரங்கன் பத்தி இந்த காட்டு பயன் எழுதுறானெனுதானெ நீங்க நினைக்கிறீங்க.

ஒரு இயற்பியல் மாணவன் என்ற முறையில் நான் சந்தோசம் அடையாம வேற யாரு சந்தோசம் அடைவாங்க? ஆகையால் நான் மிகவும் மகிழ்ந்து எழுதிய பதிவு.


கஸ்தூரிரங்கன் நீடுடி வாழவும் இன்னும் பல சிகரங்களை அடையவும் இறைவனை வேண்டுவோம்.


நன்றி - thatstamil.oneindia.in/news

மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்:
-----------------------------------------------------------

(வேறு சில பதிவுகளுடன் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக என் முண்டாசுகவிஞனை பற்றி அடுத்த பதிவில் )


Saturday, December 09, 2006

எச்சமாய் சிலையும் இரத்தமாய் மனிதனும்...

என்றோ செத்துப் போன
எச்சமான சிலை
தேவனாய்...

இரத்தம் மட்டுமே
குடிக்கும் தலைவன்
பூசாரியாய்...

உயிருடன் ,உணர்வுடன்
அற்ப தொண்டன்
படையலாய்..

பூஜிக்கப் படுகிறது
அரசியல் சனநாயகம்
தினமும்...

ஓம்,ஓம், ஓம்..