Saturday, July 28, 2007

பை பை சின்சி.....
சின்சினாட்டி.. வாழ்வில் நான் பயணித்த நகரங்களில் என்றும் மறக்க இயலாத நகரமாகும்..ஆயிற்று இன்றோடு இங்கு வந்து ஒன்னரை வருடங்களுக்கு மேலாக. இப்போது எனது தாயகத்தினை பார்க்கும் நேரம்...


சென்று வருகிறேன் சின்சினாட்டி..


என் மூச்சுவிடுதலுக்கும்


மூச்சற்று இருத்தலுக்குமான


இந்த இடைவெளிகளில்


என் இருத்தலை காட்டிக் கொள்ளும்


அடுத்த நிகழ்வுக்கான


இந்திய பயணம்


ஆரம்பிக்கிறது...


சின்சினாட்டி.,..


உன்னுடன் நான் இருந்த எல்லா பொழுதுகளையும்


என் நினைவறைகளில்


பத்திரப் படுத்தியுள்ளேன்..
இனி வரும் காலங்களில்


மயிலிறகாய் நீயும் உனது தழுவல்களும்....
சென்று வருகிறேன்...
Wednesday, July 25, 2007

சின்சினாட்டியில் என்ன நடந்தது?

சின்சினாட்டியில் நடந்தது என்ன அப்படினு இதற்கு முந்தைய பதிவில் கேட்டதற்கான விடை இதோ.. எல்லாரும் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்த பதில் இதோ... ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாதுதான் என்ன பண்றது..அப்படியே பழகியாச்சு...நான் குப்பை கொட்டும் (அ) பொட்டி தட்டும் எனது தாய் அலுவலகம் இங்கு சின்சினாட்டியில் தனது வருடாந்திர விழா (சின்ஸேசன்-2007 )வினை கொண்டாட பல ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாட முடிவு எடுத்து இருந்தது. அதுக்குனு ஒரு குழுவ போட்டு நீ பாட்டு பாடுவியா. நீ டான்ஸ் ஆடுவியா. நீ மீயுசிக் பண்ணுவியா னு கிளையண்ட் ஆப்பிஸில் வேலை பார்த்துகிட்டு இருக்கும் போது(யாரு அது... தமிழ் மணம்,வலைப் பக்கம் படிக்கிறதா அப்படினு கேட்கிறது. நான் என்ன பொற்கொடியா.பாயிண்டர்ஸ் படிக்கிறேனு சொல்லிட்டு தேடித்தேடி பிளாக் படிக்க..)வெறும் மெயிலா அனுபிச்சாய்ங்க.. நாமளும் எத்தன நாள்தான் பொறுத்துப் பார்க்கிறது. (விதி வலியது சொன்னா யார் நம்புறா?). ம்ம்..ஐ யாம் ரெடி ஃபார் டான்ஸ் னு சொல்லிட்டேன்... சொன்ன உடனெ ஆகா வந்துட்டாண்டா ஒரு நல்ல டான்சர் அப்படினு நினைச்சுகிட்டு உடனே கூட்டத்த கூட்டிட்டாங்க.. அங்க போனத்தான் தெரிஞ்சது இருக்கிறதே ஒருவாரம்தான் அதுல நீ பிராக்டீஸ் பண்ணி ஆடனும் அதுவும் குழுவாய்..இதுல என்ன பாட்டுக்கு ஆடலாம் னு கேட்டா ஹே மெரி தில்...னு ஒருபாட்டு,,தஸ் பகானெ கர் கே மே தில் தில்ல்...அப்படினு இன்னும் ரெண்டு ஹிருத்திக் பாட்ட எடுத்து வைச்சுகிட்டு ஒரு குருப் உக்காந்து இருக்காங்க. டேய் என்னடா விளையாடுறீங்களா, இது எல்லாம் நியாயமா?ஹிருத்திக் பாட்டுக்கு ஆடுர உடம்பாட என்னோடது .. எதோ. கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா அப்படினு ஒரு பாட்டோ, இல்ல டான்ஸ் ஆடத் தெரியா அபிஷேக் பச்சன் பாட்டோ போட்டீங்க அப்படினா நான் ஆடலாம்னு வந்தேன்..நீங்க என்னடான விவரம் புரியாமல்,அதுவும் ஒரே வாரத்தில் .. சாமி ஆள விடுங்கடானு ஸ்கேப் ஆனா , என் அலுவலக தோழி ரம்யா டேய் மணி நம்ப தமிழ் பாட்டு போடலாம்..என்ன சொல்ற அப்படினு கேட்க ஆஹா இது நல்லா இருக்கேனு சொல்லி பாட்டு தேட ஆரம்பிச்சோம்... கடைசியில் எல்லாரையும் அதிர வைக்கனும்..ஆட வைக்கனும் னு நினைச்சு எல்லாரையும் ஆட வைக்கிற " மன்மத ராசா மன்மத ராசா" வ தேர்ந்தெடுத்தோம்.. (அம்பி, இந்த பாட்டுல சாய "சிங்" வர்ரதா பார்த்துட்டு நீங்க ஆசையில இன்னும் அய்ய்ய்ய்ய்னு எல்லாம் சொல்லாதீங்க..அப்புறம் தங்க்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா ஒரு பூரிக்கட்டை த்ரோ கிடைக்க போகுது).

ஒகேனு நான், ரம்யாகோபால், விஜய் பரமார் மற்றும் சிமந்தனி வான்கடே னு நாலு பேர் பிராக்டிஸ் பண்ணினொம்.ஆனா நம்ப மத்த குரூப்ல இருந்து கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம் அப்படினு சொல்லி பாட்டு முடியறப்ப நம்ப தலையோட வசனத்த சொல்லாம்னு நானூம் விஜய்யும் முடிவு பண்ணினோம்.. அவனுக்கு தமிழே தெரியாட்டினாலும் சிவாஜி படத்த எனக்கு முன்னாடி முதல் ஷோ பார்த்திட்டு வந்தவன். நல்ல கிடாரிஸ்ட்.. (வெள்ளை பூக்கள் பாட்ட அருமையா பிளே பண்ணினான். எனக்காக தனியா அவ்ன் வீட்ல.. ) சோ அவனுக்கு தமிழ் உச்சரிக்க சொல்லிகொடுத்துட்டு டான்ஸ் கத்துகிட்டோம்.. இனிமையான அனுபவம்...

அமெரிக்காவில் , அதுவும் கிட்டத்தட்ட 100 நபர்களில் ஒரு பத்து,பதினைந்து நபர்களைத் தவிர தமிழ் தெரியாத இடத்தில் ,அதற்கு முன்னமே பல்வேறு நிகழ்வுகளை பார்த்துட்டு உணவுக்காக காத்திருந்த வேளையில் மன்மத ராசா ... மன்மத ராசா அரங்கேறியது... நிஜமாகவே சொல்லுகிறேன். இசைக்கு மொழி தேவையில்லை... கேட்கும் திறனும், ரசிக்கும் திறனும் இருந்தால் போதுமானது.மொழிகள் பேச்சு இழந்து போயின..ஆம் எல்லாராலும் திரும்பவும் ஒன்ஸ் மோர் கேட்கும் அளவிற்கு எல்லாரையும் கவர்ந்தது. திரும்பவும் ஆடினோம். ஆட்டுவித்தோம் உடன் இருந்த பார்வையாளர்களையும் சேர்த்து.

ஆம். இசை வரைகளற்றது.
இதுதான்பா சின்சினாட்டியில் நடந்தது..அப்பாடி ஒருவழியா முடிச்சாச்சு... ச்சோடா பிளிஸ்..


இன்னும் சில தகவல்கள்:

1. ஒருவேளை நாங்கள் வேறு வைகையான பாட்டினை( தமிழ் டிஸ்கோ, பரத நாட்டியம் ,,)தேர்ந்து எடுத்து இருந்தோம் என்றால் இந்த வகையான வரவேற்பினை பெற்று இருந்து இருக்க மாட்டோம். கிராமிய மணம் தனி மனம்தான்.
2. பார்க்க எளிமையாக இருந்தாலும் ஒவ்வோரு வார்த்தைகளுக்கும் நடன அமைப்பு இருந்த பாடல்.தனுஸ்,சாயசிங் உண்மையிலேய சாவலை சந்த்திது சிறப்பாக செய்த நடனம் இது.

3. இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக நான் நடனம் ஆடி இருப்பேன்.. ஆம். இன்னும் கொஞ்சம் திருத்திய முகபாவணைகளுடன்.
4. இந்த பாட்டினை தேர்தெடுத்த ரம்யா, ரம்யாவின் கணவர் கோபால் பட், மற்றும் என்னுடன் நடனம் ஆடிய விஜய் பரமார், சிமந்தனி வான்கடே(தமிழ் தெரியாமல் ) ஆகிய நண்பர்களுக்கு நன்றி. அதிலும் விஜயின் பணி சிறப்பானது.

ரொம்ப பெரிய பதிவா போயிடுச்சே.. ஆமாம் ஆமாம் சுயவிளம்பரம் என்றால்..அப்படித்தான்.(பிழைகளுக்கு வருந்துகிறேன்.அவசர கதியில் இட்டது)
போட்டாக்களை இங்கே பார்க்கலாம்(போட்டா எண் 95லிருந்து நம்பது தான்)சாம்பிளுக்கு சில
(விஜய், சிமந்தனி, ரம்யா, நான்)

Monday, July 23, 2007

சின்சினாட்டியில் வலைப் பதிவர்கள் சந்திப்பு

என் இனிய பி.மு கழக மக்களே,
இந்த பிரியத்திற்குரிய பிரகாஷ் உங்களுக்காக நமது கழகத்தின் காலத்தில் அழியா நிழற் படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதில் பெருமை அடைகிறேன்..சந்திப்பு ஏற்பாடு செய்த "கிளிவ்லேண்ட் ஹீரோ,வலைஉலகத்தின் காமடி புயல்,மதுரை மாப்பிள்ளே, ருண்..

சந்திப்பை சிறப்பாக்கிய பி.மு.க நிறுவனர் ,
கொலம்பஸ் கதாநாயகன், கனவுலக கார்த்தி
அரங்கம் தேவையில்லை ,வாயிலே போதும் என்று கூட்டத்தை தொடங்க உத்தேசித்த கட்சிக்குழு!!!! (கார்த்தி,அருண்,நான்)கரைவேட்டி இல்லை, காலில் விழும் கலாச்சாரம் இல்லை... கொள்கையே முக்கியம்...
சந்திப்புக்கு பின் உறவினை மேம்படுத்த நடந்த சமபோஜன பந்தி... !!!


இது முற்றிலும் வித்தியாசமான வலைபதிவர்கள் சந்திப்பு. என்ன நடந்தது,என்ன பேசினோம் என்பதை நான் சொல்லுவதனை விட உடன் பங்குகொண்ட நமது கழக தலைகள் சொன்னால்தான் அதில் மிகுந்த சுவராசியம் இருக்கும் என்பதால் அதனை அவர்களிடம் விட்டு விடுகிறேன்...
குறிப்பு: இதுக்கு முன்னாடி போடுவதாய் இருந்த சின்சினாட்டியில் நடந்தது என்ன? என்ற பதிவு அடுத்த பதிவாய்....

Thursday, July 19, 2007

சும்மா அதிருதில்ல......


வணக்கம் நண்பர்களே,...


மிக நீண்ட நாள் கழித்து வலைப்பக்கம் வந்துள்ளேன்... நீங்கள் அனைவரும் நலமா? புதுமாப்பிள்ளை கூட வலைப்பக்கம் வந்து பதிவெழுதிட்டார். பல ஆணிகள் இருந்தும் தலைவி விடாது எழுதுகிறார் , என்னை எட்டு கூட போட சொல்லி இருக்கிறார்.(எழுதுகிறேன் தலைவி..)


பாயிண்டர்ஸ் கொடி எத்தன படத்த பார்த்து லிஸ்ட் எழுதி இருக்காங்களோ? அருண் உன் பிறந்த நாளை G3, சிறப்பா பதிவெழுதி சிறப்பித்து இருந்தாங்க. நாந்தான் அத லேட்டா படிச்சேன் :(.


கார்த்தி வழக்கம்போல் கவிதை எழுதியிருக்கியா? கதை,சினிமா எல்லாம் என்ன ஆச்சுனு வந்து பார்க்கனும்...


து.தலைவி வேதா, நீங்க வந்து கேட்டதற்கு கூட என்னால பதில் சொல்ல முடியல. கவிதை போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..


அப்புறம் பிரியா, என்ன ஆச்சு அமெரிக்க ரேசன் கார்டு விடயம்????.
கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போகுது?டிரிம்ஸ் கண்களை மூடி எத்தனை கவித எழுதி இருக்காரோ? . கே.கே பிஸியா இருப்பார்னு நினைக்கிறேன்.


நம்ம நாட்டாமை ,நயந்தாரா மெலிந்த வருத்ததில பதிவே எழுதாமல் இருக்கிறார். என்ன மாதிரியே.....ம்ம்ம்ம்சண்டைக் கோழி அக்கா எப்படி இருக்கீங்க? T.R.C சார் எப்படி இருக்கீங்க? அப்புறம் நாம எழுதித்தான் சொல்லனுமா ..நம்ப உறவுக்கார வலை மக்கள் எல்லாம் எழுதிய வலைப் பக்கங்களில் இந்த சின்ன பையன் இனி சூறாவளி பயணம் மேற்கொள்ளுவான்..... காத்திருங்கள்..அப்புறம் இவ்வளவு நாள் நான் என்ன பண்ணி கிட்டு இருந்த அப்படினு நீங்க எல்லாம் கேட்கிறது எனக்கும் கேட்குது... ஏன் எழுதல அப்படிங்கிறதுக்கு விளக்கங்களை இனிவரும் பதிவுகளில் சொல்லுகிறேன்...அப்புறம் இந்த தலைப்புக்கும் நீ எழுதறதுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு கேட்கறீங்களா...


நிறைய காரணங்கள்..


1. தலைவர் படத்த அமெரிக்காவில் தமிழ் நாட்டில எப்படி பார்த்தேனோ அதே மாதிரி அதே சவுண்டு ,அதே கூட்டம், அதே ஆட்டம் பாட்டத்தோட பார்த்தேன்...2. இந்த வார்த்தைய சத்த்த்தமா இப்படி சொன்னா அதுவும் சின்சினாட்டில சொன்ன என்ன நடந்து இருந்து இருக்கும்?
நாளைக்கு சொல்லுகிறேன்.. என்ன நடந்தது என்று...

Thursday, May 17, 2007

எனக்கு இப்பொழுதுதான் தெரியும்


"பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிறவிச்சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தமானது. அதில் ஒரு எண்ணம் உதிக்குமானால், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்"

சி. கணபதிப்பிள்ளை,யாழ்பாணம்


பாரதி பற்றிய ஒரு புத்தக உரையில் இவ்வாறே எழுதி இருக்கிறார்.அது எத்துனை உண்மையென்பது அவரது கவிதையின் வாசிப்பினில் புரியவரும். பாரதியின் பல்வேறு பாடல்களை வாசித்து கேட்டு இருந்தாலும் அவரது இந்த பாடலை பற்றிய சிறப்பு எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.மதுரையிலிருந்து வெளிவந்த விவேகபானு என்னும் இதழில் 1904 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வெளி வந்த இந்த பாடலே மகாகவியின் அச்சேறிய முதற்கவிதை.


தனிமை இரக்கம்


குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி

பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்து பின்

இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்

குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்

மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்

பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ?

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா

மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்

முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

வளியெனப் பறந்த நீர் மற்றியான் எனாது

கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்

செயலையென் இயம்புவல் சிவனே!

மயிலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?டிஸ்கி1:


இது பாரதி பற்றிய எனது தேடலின் பகுதி.எனக்கு தெரியாததினை அறியும் பகுதி என்பதால் இதில் ஏதேனும் தவறு இருப்பின் என் தவறினை சரிசெய்யவும்.


டிஸ்கி2:

இன்று திருமண நாள் கொண்டாடும் தலைவி கீதாமேடம் அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்து பரிசாய் இந்த பதிவு.ஆம் அவர்களுக்கு திருமண நாள் மே-17 (வருசம் எல்லாம் கேட்க கூடாதுனு சொல்லிட்டாங்க)என்று எனக்கு இன்றுதான் தெரியும்.அதற்கும் சேர்த்துதான் இந்த தலைப்பு.
-----

Sunday, April 29, 2007

அசுரனும் அழகுதான்

அழகுகளை பார்த்து, ரசித்து,உள்வாங்கி,அனுபவித்து அதனை அழகாய் எழுதியும் காண்பித்த பிரியா அழகாக இரண்டு நபர்களை (பொற்கொடியையும்,
சத்யபிரியனையும்) எழுத சொல்லிட்டு கடைசியில் இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.அதான் என் மேல ஒரு அதீத நம்பிக்கையில் அசுரனும் அழகுதான் தலைப்பு வைச்சுட்டு நானும் அழகுனு(நீயே சொல்லிகிட்டாத்தான் உண்டுனு நீங்க சொல்றது எல்லாம் கேட்குது கேட்குது) சொல்லி இந்த உரையினை ஆரம்பிக்கிறேன்(இந்த கார்த்தி நம்பள அமைச்சரா அறிவித்ததில் இருந்து இப்படியே ஆயிடுச்சி. ஸ்ஸ்ஸ்ச்ச்ப்பா சோடா பிளீஸ்)

இந்த உலகத்தில் எல்லாமே அழகுதான்.உலகின் எல்லா பகுதிகளிலும்,எங்கேனும், எதோ ஒன்றாய் அழகு ஒளிந்தே உள்ளது. அது அஃறினையோ அல்லது உயர்தினையோ, இயற்கையோ அல்லது செயற்கையோ இல்லை வேறேதேனும் நிகழ்வுகளாகவோ இந்த பிரபஞ்சம் அழகாகத்தான் விரிகிறது.ஆனால் அதனை அனுபவிப்பதும்,அதன் அழகை உணர்வதும் ஒரு வகை கலை.அந்த உணர்வு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.ஆம், அதனால்தான் அசுரனும் என் கண்ணிற்கு அழகாய் தெரிகிறான்.

என் வீட்டு தொட்டிச்செடியினை
கடந்து சென்றபோது
எதிர் வீட்டுக்காரனின்
குரல் சொல்லியது
செடியில் பூத்த மொட்டுகள் அழகாம்..
செடியில் பூ இருந்ததா?
திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்

சன நெரிசலில் கரைந்து போகிறேன்...

இப்படி அழகை தவற விடுபவர்களின் கண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களை என்ன செய்வது?.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது? அவர்கள் சொன்ன அழகினில் சில நானும் அனுபவித்ததுண்டு.இன்னும் சில இனிமேல் அனுபவிக்கும் போது அழகாய் தெரியும்.அவர்கள் விட்டுவிட்ட நான் பார்த்திட்ட,அனுபவித்த அழகினை இங்கு தொட நினைக்கின்றேன்.

என் புலன்கள் உணர்ந்த பல அழகில் சில (ஆறு)


1. "ழ":

தமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து. பார்க்க மட்டும் அல்ல சரியாய் பேசும்போதும்,
அதன் உச்சரிப்பை கேட்கும் போதும் "ழ" அழகுதான்."ழ" என்ற ஒற்றெழுத்துவை மட்டும் இந்த வகைக்குள் அடக்க விரும்பவில்லை. "ழ" வை நான் பேச்சுத்தமிழோடு இணைத்தே பார்க்கிறேன்.கரகர குரலில் அழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுதல் அழகு. அது யாராக இருப்பினும்.(உ.ம்) கலைஞர்,வைகோ,பாரதிராஜா,வைரமுத்து,
பட்டிமன்ற பெண் பேச்சாளர் பாரதி(சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் வரும் பெண் பேச்சாளர். பெயர் சரியா? ஒருவர் காந்திமதி.இவர் இன்னொருவர்) வின் பேச்சுகள் அழகு.
யாழ் தமிழும் ,பிழை இல்லா கேரள தமிழும் மிக அழகுதான்.

2.கிராமத்து திருவிழா:


சண்டை போட்டவன் சமாதானமாகிப் போவதும், சமாதானமாய் இருந்தவன் சண்டையிட்டுக் கொள்வதும், மாமன், மச்சான்,அத்தை,சித்தப்பு,பெரியப்பு, அண்ணன்,தங்ககைகள்,அக்கா,தம்பிகள்,முறைப் பெண் என உறவுகளே ஊராய் திரியும் கிராமத்தின் திருவிழா அழகு. அந்தத் திருவிழா நாட்களில் கவலை மறந்து,வேலை மறந்து களிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கும் கிராமத்து திருவிழா அழகு.ஊர் முழுவதும் குழாய் மைக்குகள், தெருவெங்கும் தோரணங்கள், பெருசுகளின் அரட்டைகள், பறையாட்டம்,கரகாட்டம்,நாடகம்,கறிச்சோறு,மதுநெடி,மாமன்களின் கேலிப் பேச்சு, தாவனி கட்டிய முறைப் பெண்ணின் மஞ்சள் தண்ணி, என கிராமத்து திருவிழா அழகோ அழகு.

3.தீப ஒளி:

சூரிய ஒளி,நிலவின் ஒளி, மின்சார விளக்கின் ஒளி என எல்லா ஒளிகளும் வெளிச்சத்தினை கொடுத்தாலும்,பிரகாசத்தினை தந்தாலும் மிக அழகாய் தெரிவது தீப ஒளியே. என் தோழியின் மூலமாய் நான் உருவ வழிபாடுகளை விட்டு விலகி இருந்த காலங்களில் ஒளியின் மீது இன்னமும் காதல் பிறந்தது. சிலைகளற்ற இடத்தில் வெறும் விளக்கினை மற்றி ஏற்றி ,அதன் சுடர் பிரகாசம் மனதுக்குள் என்னவோ செய்யும் ஒன்று.கார்த்திகை மாதங்களில் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் விளக்கினை ஏற்றி வைக்கும்போது அது நின்று எரியும் அழகினை நானும் நின்று ரசித்திருக்கிறேன்.அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு. மாதா கோயிலின் மெழுவர்த்தி உருகி கரைந்திடுகையில் அதன் அழகு இன்னமும் கூடும்.

4.போராளிகள்:


தனக்கு பின்னால் தன் சமூகம் நலம் பெற வேண்டும்,தான் அனுபவித்த நச்சுக் காற்று மறைந்து தன் சந்ததியினர் நல்ல காற்று சுவாசிக்க வேண்டும் என்பதற்காக போராடும் எல்லா போராளிகளும் அழகானவர்கள்.தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.

5.வெள்ளை வேட்டி/சட்டை/மீசை:

அது என்னமோ தமிழனுக்கு ஒரு கர்வத்தினையும்,அழகினையும் தருவதில் இவைகளே முதலிடம் என்று சின்ன வயதிலிருந்தே ஒரு அழமான நம்பிக்கை.எனக்கு வேட்டி கட்ட சரியாக தெரியாவிட்டாலும் ஒவ்வோரு பண்டிகையின் போதும் நானும் விடா முயற்சியாய் வேட்டி அணிந்துகொள்வேன்.எஜமான்,நாட்டாமை(சியாம் நீங்களும் இப்படித்தான் முறுக்கு மீசை வச்சு,வெள்ளை வேட்டி எல்லாம் கட்டி இருப்பீங்களா?),கிழக்கு சீமையிலே மாதிரியான படங்களை பலமுற நான் பார்த்ததுக்கு இந்த வேட்டி சட்டையும் மீசையும்தான் காரணம். அப்புறம் மீசை. என் அரும்பு மீசை வளரத்தொடங்கியதில் இருந்தே என்னில் அழகாய் நான் கானுவது என் மீசையினைத்தான். பாரதியின் மீசை, எனது அப்பாவின் மீசை என அழகாய் தெரியும் மீசைகள் ஏராளம்.அதே மாதிரி உல்லாசம் படத்தில் விக்ரமின் மீசைக்காகவே "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா "பாடலை பலமுறை பார்த்துள்ளேன். காதல் மன்னன்,உயிரோடு உயிராக படக் காலத்தில் வரும் அஜித்தின் மீசை அழகானது.


6.

என் அன்றாட பொழுது:

அதிகாலை காபி,
அந்திமச் சூரியன்,
அம்மாவின் புண்ணகையினில் மறையும் அவள் கண்ணத்து கோடு,
சாய்வு நாற்காலியில் செய்திகளுடன் உறங்கும் அப்பா,
பழசாகிப் போன பைக்,
இரைச்சலாய் இயங்கும் நகரம்,
டிராஃபிக் சிக்னலில் காணும்
சேலை கட்டிய தேவதைகள்,
எதிர்பாரமல் சந்திக்கும் பள்ளிக் கால நண்பன்,
சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா,
காதில் கரையும் இனியே மெல்லிசை,
உறங்குவதற்கு முன் ஒருமுறையேனும்
நினைத்துவிடும் முதற்காதல்
என இவற்றில் ஏதேனும் ஒன்று
கூடியோ அல்லது குறைந்தோ
அழகாய்த்தான் இருக்கிறது

என் அன்றாடப் பொழுது

சாலையோரக் குழந்தையின்
புண்ணகையினை சுமந்து கொண்டு....

பிரியா, எதோ எனக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு பட்ட ,அனுபவித்த, நம் நண்பர்கள் எழுதாத அழகினை எழுதியுள்ளேன். அதுவும் மிகவும் தாமதமாக.இதற்கு அப்பாலும் இதைப் பத்தி எழுத நம்ப நட்பில யாரும் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியாரவது இருந்தீங்க அப்படினா நான் டேக் பண்ணினதா நினைச்சு எழுதிடுங்க.

'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்"னு நான் எங்கேயோ கேட்டது. அது அப்படியே எல்லாருக்கும் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...


Thursday, March 29, 2007

இங்கேயும் வியர்டு (படிக்க)கிடைக்கும்

புயலாய் பி.மு.க கட்சியில் நுழைந்த கோபி எனக்கு ஒரு வலை(வீட்டு)வேலை குடுத்தார். உன்கிட்ட இருக்கிற வியர்டான விசயம் என்னனு கொஞ்சம் தமிழ் கூறும் நல்உலகத்துக்கு எடுத்துசொல்லுப்பா அப்படினு. ஆனா நாம வழக்கம்போல ஆணிய பிடுங்கிட்டு(இல்ல அப்படி பிடுங்கின மாதிரி நடிச்சிட்டு) இருந்ததுல எழுதறததுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு. தாமதத்திற்கு வருந்துகிறேன் கோபி.சரி விசயத்துக்கு வருவோம். வியர்டுனா என்ன அது நமக்கிட்ட இருக்குதானு தேடிப் பார்த்து சொல்லுவோம்னு பார்த்தா, நான எங்க வீட்டுல பிறந்ததே வியர்டுதான் அப்படிங்கிறத தவிர வேற ஒன்னும் தேறமாட்டேன் என்கிறது... ஆனாலும் விடுவோமா ... தெரியாதத தெரியும்னு சொல்லி வேலை பார்க்கிற நமக்கு இது என்ன புதுசா என்ன. தேடிக் கண்டு பிடித்து இதோ....


வியர்டு 1 : வாசித்தல்:

எவன்டா இவன் இதப் போய் வியர்டு சொல்ரானேனு நீங்க சொல்றது கேட்குது..ஆனா, வாசித்தல் அப்படினு நாம சொன்னது கதை புத்தகத்த எப்படி வாசிக்கிறது அப்படிங்கிறதுதான். சின்னபுள்ளையா இருக்கிறப்ப வீட்ல கதைபுத்தகம் படிக்க விடமாட்டங்க. ஆனா நமக்கு அத படிக்காம இருக்க முடியாது.. என்ன பன்றது எப்படியாவது படிச்சே ஆகனும் இல்லைனா சோறு தண்ணி இறங்காதே.நான் எங்க வீட்ல மத்தவங்க யாரும் பண்ணாத நான் செய்ய ஆரம்பித்தேன்.பாட புத்தகத்த எடுத்து வைச்சுகிட்டு அதுக்குள்ள மறைச்சு வைச்சு காமிக்ஸ புத்தகம் படிக்க ஆரம்பித்ததேன். இன்ன வரைக்கும் அவங்கனால அத கண்டு பிடிக்க முடியல. அப்படி தொடர்ந்த அந்த வாசிப்பு அப்புறம் அப்படியே மற்ற எல்லாவகையான கதைபுத்தகத்திலையும் கொண்டு போய் விட்டுடுச்சு.அதுல முக்கியமானது இந்த ஆனந்த விகடன் படிக்கிறது. ஆவி படிக்கிறதுல நான் ஒரு பைத்தியமாகவே மாறிப் போனேன். புத்தகம் வாங்கியதும் அதனை திறத்து, அந்த புத்தகத்தின் வாசத்தினை முகர்ந்த பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். படிக்கிறது எப்படி ,கடைசிப் பக்கத்தில் இருந்து முந்தைய பக்கத்திற்கு வருமாறுதான். அது அப்படியே இன்னமும் தொடர்ந்து இப்ப எல்லா புத்தகத்தையும் பின்னாடி இருந்துதான் படித்து வருகிறேன்.


வியர்டு 2:இருளும் தனிமையும்:

அது என்னமோ தெரியல ,எனக்கு இந்த இருள் ரொம்ப பிடிக்கும் . ஒரு வேளை கருமைதான் எனக்கு பிடித்த கலர் என்பதாலாவோ என்னவோ இருளில் தனியாய் இருக்க பிடிக்கும். மின்சாரம் போனதுனா ஊரே வருத்தபடுவாங்க..ஆனா நான் மட்டும் சந்தோச படுவேன். மெழுகுவர்த்தியோ, விளக்கோ எல்லாரும் தேடிகிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் தனியா என் அறையில் படுத்து கொண்டு சத்தமாய் பாட்டு பாடிக் கொண்டு இருப்பேன்.(குரல் நல்லா இருக்குமா அப்படினு எல்லாம் நீங்க சாதரணமாய் யோசிக்க கூடாது.ஏன்னா நான் தான் வியர்டாச்சே.)இப்பவெல்லாம் பாட்டு பாடுறத விட பாட்டு கேட்கத்தான் பிடிக்குது..இந்த மாதிரி சூழ்நிலைக்குனே என்கிட்ட ஒரு பாட்டு பட்டியலே இருக்கு.உ.ம் : காக்கை சிறகினிலே..., ஏழாவது மனிதன் படத்திலிருந்து மற்ற எல்லா பாடல்களும், பூவே செம்பூவே..., தேவதை இளம் தேவதை,பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய் ன்னு.....நீண்டு கொண்டே போகும் .எனவே தனியாய், இருளில் பாட்டு பாடிக்கொண்டே(பக்கத்துல இருக்கறவங்கள பத்தி கவலை படாம),அல்லது கேட்டுக்கொண்டே இருக்க பிடிக்கும். மொட்டை மாடில படுத்துகிட்டு வானத்த பார்த்துகிட்டு இருக்கிறப்ப அந்த இருள் அழகு.


வி.டு 3: மழையில் நனைதல்:

ச்சோ என்று பெய்யும் மழையானாலும் சரி, சிறு சாரலாய் இருந்தாலும் சரி மழையில நனைய சந்தோசம். எப்படா மழை வரும் அப்படினு காத்து கிட்டு இருப்பேன். மழை வந்தது அப்படினா விடு ஜீட்.. அப்படியே மழையில போய் நனைஞ்சுகிட்டு ஊரெல்லாம் சுத்தி, தொப்பல் தொப்பல வீட்டுக்கு வந்து நின்னு அம்மா கிட்ட திட்டு வாங்கினோம் அப்படினா அது வாழ்க்கை.இப்பத்தாண்ட நீ இயற்கையின் காதலன் அப்படினு எனக்கு நானே சொல்லிக்கிட்டு திரிவேன். நனைதல் கொஞ்சம் கொஞ்சமாய் வேறு படத் தொடங்கியது . முதலில் மழையில் நனைந்து நடக்க பிடித்தது.பிறகு நனைந்து கொண்டு அப்படியே வந்து அம்மா கிட்ட காபி கேட்டா அவங்க இல்லைனு சொன்னதுக்கு அப்புறம் திரும்பவும் பக்கத்தில இருக்கிற டீக் கடைக்கு போயி சுடச்சுட காபி குடிக்கிறது. மழையில நனைஞ்சிட்டு அப்படியே ஐஸ்கீரிம் பார்லர் போய் ஐஸ்கீரிம் சாப்பிடுறதுனு மாறிகிகிட்டே இருக்கு

வி.டு 4: குலைச்சு அடிக்கிறது.

சாப்பிடறதுல எனக்கு நிகர் நானே தான் . அதுவும் எங்க வீட்ல கொஞ்சம் மக்கள்தொகை அதிகம்(இத பத்தி ஒரு தனிப் பதிவு விரைவில்ல்ல்ல்).அதுனால முன்னே யாரு வராங்களோ அவங்க அதிர்ஷ்டசாலி .ஆனா என் அண்ணாவுக்கு மட்டும் அம்மா தனியா எடுத்துவைச்சுடுவாங்க.. நம்மள மட்டும் எனோ மதிக்க மாட்டாங்க..சரி சரி விசயத்துக்கு வரேன். நாம எப்பவுமே தனியா சாம்பார் ஊத்தி சாதம் சாப்பிட்டாலும் இந்த சாம்பரோட தயிர் சேர்த்து சாப்பிடுறது தனி ருசி.இட்லி அப்படினா தேங்காய் சட்னியும் தக்காளி குருமாவையும் ஒன்னா குலப்பி அடிக்கிறது, கறி குழம்போட ரசம் சேர்த்து சாப்பிடுவது, தேனீரோடா பருப்புவடை(இத எங்க ஊர்ல ஆமை வடைனு சொல்லுவாங்க. ஏன் இப்படி பேர் வந்துச்சுனு நிறைய நாள் யோசிச்சு யோசிச்சு .... என்ன நடந்தது ஒன்னும் நடக்கல இன்னும் யோசிக்கிறேன்) சாப்பிடுறது தேனீர் ஒரு வாய், வடை ஒரு வாய்னு இப்படி ஒன்னோட ஒன்னு இணைத்து சாப்பிடறது நம்மகிட்ட இருக்கிற இன்னொரு வியர்டு விசயம். ஆனா இது நம்ம வீட்ல மட்டுமே செயல் படும்கிறதுனால நடைமுறை சிக்கல் இருக்கு..


வி.டு 5: 5.1,5.2,5.3..,,,,???###

ஹி..ஹி .இன்னும் நிறைய விசயம் இருக்கு மக்கா. நீ பாட்டுக்கு 5 மட்டும் எழுதுனு சொன்னா நான் என்ன பன்றது. அதுனால இது கீழ்கண்டவாறு வகைபடுத்தப் பட்டுள்ளது

5.1 ரெளத்திரம்:
அதாங்க கோபம் .நமக்கு இது கொஞ்சம் அல்ல நிறையவே .இந்த முன் கோபம் ,பின் கோபம், நடு கோபம்னு எல்லா கோபமும் சரியான நேரத்தில வந்திடும். அம்மா கிட்ட இருந்து அடுத்த மனிதன் வரைக்கும் கோபம் கொந்தளிக்கிறது.என்னால கட்டுபடுத்த முடியாத விசயம் இது மட்டுமே. வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கொண்டு வரைவோலை வாங்கும்போது அந்த அலுவக நண்பர்(???) வீட்டுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ சம்பந்தமற்ற விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் போது கோபம் பொத்துகொண்டு வருகிறது அவரின் மேல்.அலுவலகத்தில் குழுமனப்பான்மை இல்லாத சக ஊழியனிடம் கோபம்,எப்போதெல்லாம் இலங்கையில் ஒரு தமிழ் குழந்தை அனாதையாகிறதோ அப்போது எல்லாம் புத்தரின் மேல் கோபம்,மிகைபடுத்தப் பட்ட செய்திகளை தரும் நாளிதழ்களின் மீது , என எல்லாரிடமும் சீக்கிரம் வரும் கோபம் என்னை விட்டு மெதுவாகவே செல்லுகிறது. எப்ப மாறுமோ?

5.2 நேர்த்தி:
நானாய் எடுத்துகொண்ட வேலையோ அல்லது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையோ அது நேர்த்தியாய் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் உழைப்பது. இதுவே எனக்கு சங்கடமாய் அமைந்த நேரங்கள் பல. ஆனாலும் நேர்த்தியாய் சிறப்பாய் குடுப்பதில் மெனக்கெடுவேன்.

5.3 பாசம்:
நான் ஒவர் செண்டினு என் எல்லாம் தெரிந்த தோழி திட்டிகிட்டே இருப்பா.நான் அதிகமாய் பாசமாய் இருந்து அதே மாதிரி அனைவரும் இருக்க வேண்டும் என எண்ணி அறிவால் முடிவெடுக்க வேண்டிய விசயங்களை மணத்தால் முடிவெடுத்து வருத்தமே உற்றாலும் பாசம் மட்டும் குறைய மறுக்கிறது எல்லாரிடமும்.


5.4 கடைசி நிமிட வேலை:

முன்னமே திட்டமிட்டு வேலைகளை வரைமுறை படுத்தினாலும் என் சோம்பல் காரணமாய் நாளை செய்வோம் என்று எனது நிறைய வேலைகள் கடைசி நிமிடத்திலெயே முடிக்கப் படுகிறது. இது மட்டும் மாறிட்டா......5.5.தனித்து இருத்தல்:
வெள்ளையாய் உலகம் இருப்பின்
அதனில் கரும் புள்ளியாய்
நான்.
சரியோ தவறோ
தனித்து இருக்கவே அசைபடுகிறென்
!!!@@@@@###.இப்படி எதாச்சும் கிறுக்கி மத்தவங்கள குழப்பறது....

இதுக்கு பேருதான் வியர்டானா நீங்க தான் சொல்லனும்.. கோபி வேலைய முடிச்சாச்சு. எதாச்சும் ஒரு செண்ட் பாட்டில பார்சல் செஞ்சுடு.. இப்பதைக்கு இது அவுட் ஆப் வலை உலகம் ஆயிடுச்சு. அப்படியே பார்த்தாலும நமக்கு தெரிஞ்ச மக்கள் எல்லாரும் அல்ரெடி எழுதியாச்சு.அருண் நீ மட்டும்தான் பாக்கினு நினைக்கிறேன்.எனவே உன்ன மட்டும் இப்ப கூப்பிடுறேன்.....

Wednesday, March 21, 2007

வழிந்தோடுகிறது வாழ்க்கை பிடித்தமற்று...

நீண்ட(2++++வாரம் ) இடைவெளிக்கு பிறகு திரும்பவும் வலைபக்கங்களில் மணி.மணி.மணி(எக்கோ)...
மக்களே எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளா நான் இந்த பக்கம் வருவது கிடையாது.வேலைப் பளுனு சொன்ன நீங்க நம்பவா போறீங்க. எல்லாரும் நிறைய எழுதி இருப்பீங்க.. எப்ப படிக்கறது????? எப்படி பின்னுட்டம் இடுறது?????
உளறல்(கவித கவித...) ரிலே என்ன ஆச்சுனு தெரியல..யாரு இப்ப உளறிகிட்டு சீசீ ஓடிக்கிட்டு இருக்காங்களோ? இப்ப கவித மாதிரி சொல்லி இருக்கிறது தான் என் கடந்த வார வாழ்க்கை.. அப்புறம் பாசக்கார கோபிநாத் எனக்கொரு ஹோம் ஒர்க் கொடுத்து இருக்காரு.அத ஆராய்ச்சி பண்ணி எழுதனும். சோ, கோபி சாமி எனக்கு கொஞ்சம் டைம் கோடு சாமி..


இயக்கிவிடப் பட்ட
மின்விசிறியாய் சுழலுகிறது
வாழ்க்கை...

கழட்டி எறியப்பட்ட ஆடைகள்
அதனதன் வியர்வை வாசங்களை சுமந்துகொண்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
என் கலைந்துபோன அறையில் ...

மூன்று முறை புதுப்பிக்கப்பட்டும்
படிக்க முடியாமல் போவதை
நினைவுறுத்தியது
நூலக புத்தகத்தின்
முனைமடங்கிய பக்கம்..

எப்போதோ எழுதி வைத்த தலைப்பு
தானாய் கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறது
காற்று வெளிகளில்
விரல்களில்லாமல்...

இருக்கையே படுக்கையாகி அதில்
உறங்கிப்போன பொழுதில்
முகத்தில் அறையும் சூரியனை
காண்பிக்க மறுத்துவிட்டது
என் கைபேசியின் அலாரம்...

உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...Wednesday, March 07, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்

வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் காதல்.

அதன் காரணமாய்
விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு
மெளனமாய் உன் பெயர் சொல்லி..

என் இமைமூடிய பொழுதுகளில்
உந்தன் பெயரை உரக்கச் சொல்லியதற்கு
ஊர் சொல்லுகிறது நான் உளறுகிறேனாம்
ஊருக்கு எப்படி தெரியும்?
இது உள்ளத்தின் வேலை என்று.

ஆம் மரபுகாரர்களுக்கு எப்படித் தெரியும்
புதுக்கவிதை?

என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து

என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே

உன்னை உள் வாங்கி
என்னை விடுத்து
சுவாசம் செய்கிறேன்
உயிரும் வாழுகிறேன்உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
விழி விழுந்து என் விதி பார்த்து
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....

குறிப்பு

கடைசி பாரா வின் ஓவ்வோரு வரிகளையும் கிளிக் செய்தால் தொடர் ஓட்டத்தினை பார்க்கலாம்.


தொடர் ஒட்டத்தில்
---------------------------------
தலைவர் :
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
நிதியமைச்சர் :
விழி விழுந்து என் விதி பார்த்து
து.முதல்வர் :
உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
நான் :
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
Sunday, February 25, 2007

18,குமரன்திரு நகர்,திண்டுக்கல்-624005


"எல்லா இடங்களிலும் எப்படிச் சுற்றித் திரிந்தாலும்,என்னவாகிப் போனாலும் நான் நானகிப் போவது என் வீட்டில் மட்டுமே."

இப்படித்தான் எனது முதற்பதிவினை எழுதி வலைவீட்டினை ஆரம்பித்தேன். உருவமற்ற சுவர்களை கட்டியதற்கே நான் எல்லையில்லா சந்தோசம் அடைந்த போது, உண்மையாகவே சுவர் எழுப்பினால்...


ஆம், எனது நீண்ட நாள் ஆசை கடந்த திங்கள் கிழமை(பிப்ரவரி-26) நிறைவேறியது.
நான் பிறந்து ,அழுது,சிரித்து,தவழ்ந்து,விளையாண்டு,கனவுற்று,கோபமுற்று,களவுற்று
உண்மையறிந்து என எனக்கு எல்லாம்சொல்லிதந்த என் குடிசை வீடு மச்சிவீடாய் ஆகிப் போனது. எனக்கு அந்த செங்கல்லின் ஈரம் தெரியாது,ஜன்னல் கம்பியின் எடைதெரியாது,என் வீட்டுகதவின் வாசம் தெரியாது.சிமெண்ட் மூட்டையின் விலை தெரியாது.குவித்த மணலில் விளையாடி,சரித்துவிட்டு போகும் குட்டிப் பிள்ளைகளை பார்த்திடவும் இல்லை.
வேலையாட்களுக்கு டீ,வடை வாங்கித்தந்ததும் இல்லை.ஆம்,நான் பார்த்து பார்த்து கட்டவில்லை ஆனாலும் சந்தோசமுறுகிறேன் என் ஆசை நிறைவேறிப் போனதில்.


"மணி ஒன்னும் கவல படாத,அம்சமா கட்டிபுடலாம் ".கொத்தனார் அண்ணா மருதமுத்து,முதல் நாள் தொலைபேசிய போது சொன்ன வார்த்தை. செய்தும் முடித்து விட்டார்.இதோ வேலை எல்லாம் முடிந்து ,அப்பாவும்,அம்மாவும் போனவாரம் தொலைபேசும்போது,எல்லா வேலையும் முடிஞ்சுடுப்பா.இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அத பால் காய்ச்சிட்டு பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லிய போது மனசுக்குள் எதோ சின்னதாய் சந்தோசம்.அப்படியே அப்பா சொன்ன வார்த்தைகளும் மனதுக்குள் மத்தாப்புகளை தெளித்துவிட்டு போனது.

ஆம் வெறும் நிலம் மட்டும் வாங்கி அதனை என் விருப்ப படி கட்டி போகும் சாதரண வீடு அல்ல.. புங்கை,வேம்பு,முல்லை,இட வல திண்ணை,மண் தரை, தென்னங் கீற்றுமாய் குளிர்ச்சியாய்த்தானிருந்தது என் சின்னஞ்சிறு வயதுவிடு.காலம் மாற எனது வீடும் உருமாறியது.வீட்டிற்கு வெளிய சாலை போடுகையில் நான் ஊஞ்சலாடிய எங்கள் புங்கை போய் என்வீட்டிற்குள்ளே சிமெண்ட் தரை எட்டிபார்க்கையில் சாணி பூசிய என் அம்மாவின் கைகளுக்கு விடுதலை.என் கடைசி அக்காவோ விதவிதமான கோலத்துடன் சின்னஞ்சிறு தெருவையே வாசல் முற்றமாக்கினாள். அண்ணாவின் தயவினால் ,பிறகு சிறிது சிறிதாய் உருமாறினாலும் என் கனவு என்னுடனே வளர்ந்து கொண்டுதானிருந்தது. நாம சம்பாதித்து இந்த வீட்ட கட்டனும்,அப்பா,அம்மா அதுல சந்தோசமா அவர்களுடைய காலத்த கழிக்கனும் அவங்களுக்கு பிடித்த மாதிரினு என் ஆசைமனதுக்குள் இருந்து கொண்டுதானிருந்தது.இதோ இப்போது,இன்னும் உருமாறி புது பொலிவுடன் சந்தோசம் தருகிறது என் பழைய புதியவீடு.என்ன கொஞ்சம் தாமதாமா பண்ணிட்டேனோனு தோனுது.

18,குமரன் திருநகர் திண்டுக்கல்-5
வாசித்து பார்த்தால் முகவரிதான்
வசிக்க போகும் எனக்கோ
என் முகமும்-அரியும் நீதான்.


சேதபடுத்தினாலும்
சிரித்து சந்தோசம் தர
உன்னால் மட்டுமே முடியும்


உன்னால் மட்டும் எப்படி
இத்துனை ஆண்டானாலும்
அதே வாஞ்சனையுடன்
என்னை தழுவ முடிகிறது
ஓ, என் அம்மா கரம் பட்டு
நீயும் கத்துக் கொண்டாயோ...

நான் விட்டுப் போவதற்கு நீ சுவடு அல்ல
என் சந்ததியினை சொல்லும்
வரலாறு நீ...

நன்றி என் இல்லமே
உன் வரலாற்றின் ஒரு பக்கத்தில்
எனையும் இருத்தியமைக்கு...

நீ இன்று போல் என்றும்
வசந்தம் வீசு,
அன்பு காண்பி,
கருணை காட்டு,
இன்னும் புதியதாய் பலவும்
என் வரும் சந்ததிக்கும் ...

அப்பா,அம்மா பெருமை அடைந்தார்கள்.அக்கா-மாமா,அண்ணா -அண்ணி,குட்டிக் குழந்தைகள் சந்தோசமுற்றனர். நான் இங்கே இருந்துகொண்டு என் வலைப் பக்கத்தில் எழுதிப் பார்த்து சின்னதாய் ஆனந்தம் அடைகிறேன்.


"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேனி
பிள்ளைகள் பேனி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவது இல்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவது இல்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும்
விளங்க இடைவிடாது மனம் உருகி
மகிழ்ச்சியில் திளைத்திட...."

ஆசைகளாலும், கனவுகளாலும் ,மகிழ்சியாலும் நிரம்பி எனது வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது என் ஆசை விடு . காத்து இருக்கிறேன் நானும்...

Sunday, February 18, 2007

கற்றது கடலளவு


தலைப்ப பார்த்துட்டு யாரவது கடல் கணேசன் கிட்ட போய் போட்டு குடுத்து எனக்குஅவர் ஆட்டோ அனுப்பற மாதிரி செஞ்சுடாதிங்க. மேட்டர படிச்சுட்டு எதுவா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வாங்க.
"கற்றது கடலளவு - கடைசி அத்தியாயம் 50 "
இப்படித்தான் கடல்கணேசனின் 50 வது பதிவில் தலைப்பு இடம் பெற்றிருந்தது. பார்த்ததும் அட தொடர் முடிஞ்சுபோயிடுச்சானு மனசுக்குள்ள ஒரு சின்ன ஏக்கம். ஆதனால் கற்றது கடல் அளவுனு நம்ம பக்கத்துல தலைப்ப போட்டுகிட்டு சின்னதா சந்தோசப் படுறதுல ஒரு சுகம் மற்றும்ஆனந்தம்தான்.இது ஒரு கடலளவின் முடிவுஅல்ல, ஒரு கடல்துளியின் முடிவுதான் என்று எனது மனதிற்குள் தோன்றியது. ஆம் இன்னும் சில புது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது இது ஒரு துளியின் முடிவுதான் . ஆனந்த விகடன் மூலமாய் கடல் கணேசன் தமிழகம் முழுவதும் அறிந்த ஒரு எழுத்தாளார். அவரின் எழுத்துகளை இதற்கு முன்னால் நான் வாசித்திருக்க வில்லை. நான் ஆனந்தவிகடன் படிக்க ஆரம்பித்த போது அவர் விகடனில் எழுத்து பணியினை நிறுத்துவிட்டு கடல் தண்ணியின் உப்பு காற்றினை சுவாசிக்க சென்றுவிட்டார்.ஆனால் கடவுள் கடவுள்தான்.சில நல்ல எழுத்துகளை வாசிக்கமால் எப்படியாடா உலகில் நீ இருக்க முடியும் என்று என்னி எனக்கொரு வாய்ப்பு அளித்தான். நல்ல எழுத்துகளை வாசிக்க எப்போதும் வாய்ப்புகளை அவன் ஏற்படுத்தியே தருவான்.இதோ அந்த வாய்ப்பினைஎனக்கு அளித்த போது நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றே நினைக்கிறேன்.ஆம்.நிறைய முறை சில வாசிப்புகளைபல புத்தகங்களில்படித்துவிட்டு கருத்து சொல்லலாம் என்று நான் என்னி, அதனை செயல் படுத்தி மடலிட்டு எதுவும் பிரசுரிக்கபடாமல் எழுத்தாளனை சென்றடைந்ததா,இல்லையாஎன்று பல நாள் எண்ணியிருந்தேன். ஆனால் முதல் முறையாக ஒரு எழுத்தாளனின் படைப்புகளைவாசித்துவிட்டு, அதனை பற்றி கருத்து சொல்லி, அதற்கு பதில் கருத்தும் அறிந்து ,அவருடனே உரையாடவும் செய்தபோது நான் பெரு உவகை அடைந்தேன்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாய் 50 பதிவுகளுக்கும் மேல் ஒரு தொடர் எழுதி, தன் அனுபவங்களை சொல்லி ஒவ்வொரு பதிவிலும் ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கிபல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட கடல் கணேசன் அவர்களுக்கு நன்றி. நான் அவர் எழுதின தொடர ஆபரேசன் செஞ்சு இது அப்படி,அது இப்படினு சொல்லப்போறது இல்ல. ஏனேனில் எனக்கு அவ்வளவு தமிழ் அறிவும் கிடையாது.பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்யும் அளவுக்கு மிகப் பெரியவாசகனும் இல்லை. மிகச் சாதரன வாசகனாய் அவர் எழுத்தில் கவரப்பட்டு சில அத்தியாயங்களில் மனது நிறைய சோகங்களுடன்,சிலதில் சந்தோசங்களுடன் வேறு சிலவற்றில் பல கேள்விகளுடன்தூங்கிப் போயுள்ளேன். அதற்காய் , அந்த எழுத்தாளனுக்கு நன்றி சொல்ல ஆசைப் பட்டே இந்த நீண்ட பதிவு.

நீங்கள் வேறு ஒரு வலைப்பக்கத்தில் எழுதி இருக்கும்போது உங்களது சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தேன். அதில் சந்துரு என்ற கட்டுரைபடித்து, நான் அழுத போதுதான் உங்களது எழுத்துகளை நேசிக்க ஆரம்பித்தேன். பிறகு நீங்கள் இந்த வலைப்பக்கத்தினை தொடங்கி பல எழுத்துகளை அளித்த போது அதனை வாசித்து, பிறகு உங்களுடன் பேச ஆரம்பித்த போது ,நிஜமாய் சொல்லுகிறேன் என் மனதிற்குள் ஒரு இனம் புரியா சந்தோசம்.. ஒரு எழுத்தாளனுடன் பேசுகிறேன் என்று. பகிர்தல் எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வளவு அழகானது என்பது அதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் அமைகிறது என்பதை உங்களின்எழுத்தில் காணலாம். உங்களின் எழுத்துகள் மிகவும் வலிமையானது. வலைப்பக்கம் ஆரம்பித்த உடனேஎல்லாரையும் வசியம் செய்து எல்லோரையும் திரும்பி பார்க்க செய்தவர் நீங்கள். பாராட்டுகளுக்காக பலர் எழுதிக் கொண்டு இருக்கையில், எழுதுவது என் கடமை. வாசிப்பதும் வாசித்து எண்ணங்களை பகிர்வது உன் விருப்பம் என்று தான் தொடர்ந்த பணியினை தான் இல்லாத போதும் தொடர்ந்து ,பதிவுகளை வரச் செய்து தான் எடுத்த பணியினை சரியாக செய்தவர். ஹாட்ஸ் ஆப் டு யூ கணேசன். ஒரு எழுத்தாளனால் மடடுமே எண்ணி செய்ய முடியும் இவ்வாறு. உங்களது பின்னாளைய சில பதிவுகளை படித்துவிட்டு கருத்து சொல்லாமல் வந்ததற்காய் வருந்துகிறேன்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஒருவேளைநீங்கள் 50 வது பதிவு எழுதி கடற் பயணம் செய்யாமல் ஒருவேளை தரையிலேயே இருந்து இருந்தால் இன்னமும் முதல் பின்னூட்டத்தினை போட்டுவிட்டு நான் முதலா என்று கேட்டு இருந்து சாதரண வாசகனாய் ம்ட்டுமே இருந்திருப்பேன்.
தற்போது கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கீறிர்கள், திரும்பிய பிறகு என்றாவது ஒரு நாள் இந்த பகுதியினை படிக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் வாசகனில் என்னை தனியாக அடையாளம் காண செய்யும் என்ற நம்பிக்கையுடனுமதான் இந்த பதிவினை எழுதுகிறேன் ...
கற்றது கடலளவு
-----------------------------
நானும் கடற் பயணம் செய்தேன்
என் பாதம் நனையாமல்.
கண்களினால் கற்று
கரை தெரிந்தேன்.
கடல் விசித்திரமானது
அது அதிசியமானது.
உப்புத் தண்ணி
என் முகம் அறைந்து சொல்லியது
கடல் பல வரலாறுகளைகொண்டது
தன் ஒவ்வொரு துளியிலும்!
அனுபவிக்க கற்றுக்கொள்
கற்றது கடல் அளவு
எனைக் கொள்ளைக் கொண்டது
உலகளவு.

உங்களது தொடரில் பல அறிய, தெரியவேண்டிய விடயங்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் அதனை விட மிகவேகமாய் நினைவுக்கு வருவார்கள். "நட்ராஜ்,ஜோ,கேத்தரின், வில்லியம்ஸ்,ரோசானா, பட்ரீஷியா..ஆம் பட்ரீஷியா எனை மிகவும் பாதித்த நபர்.
பட்ரிஷியாவுக்கான எனது இந்த கவிதையும் எனக்கு பிடித்த என் எழுத்து..
இழத்தலும்,பெறுதலும்
---------------------
உன் அகம்,புறம் தெரியாது
நாளை உன்விரல் எனைப் பற்றாது
இருந்தும் எனை இழக்கிறென் முழுவதுமாய்..
என் உணவோ, உன் உடலோ
காரணமாய்த்தான் இருக்கிறது
ஒவ்வொரு கணமும்...

அவரது நன்றி அறிவிப்பு இவ்வாறுதான் இருக்கிறது
"எனக்கு கடலை அறிமுகம் செய்த திரு. 'கடலோடி' நரசய்யாவுக்கும், என்னைப் பத்திரிக்கையாளனாக உருவாக்கிய ஆனந்த விகடனுக்கும் (ஜூனியர் விகடனுக்கும்), என் வாழ்க்கைப் பாதையில் என் மீது நிஜமான நேசம் காட்டிய எல்லோரின் அன்பிற்கும் எனது நன்றி.
கற்றது கடலளவு தொடரை வலைஉலகத்தில் பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் இனிய அனுபவம். இத்தொடர் நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தி மன நிறைவை அளித்துள்ளது. வலையுலக நண்பர்கள் கடிதங்களின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் அளித்த ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் என் வாழ்வில் எல்லாக் கட்டங்களிலும் துணை நின்று என்னை வழி நடத்தியவர்கள். இந்தத் தொடர் இணையத்தில் வெளியான போதும் நான் இல்லாதபோது தொடரைத் தொடர்ந்து தவறாமல் பதிவிட்டவர்கள் என் அன்பு நண்பர்கள்தான்.. அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியமற்றது.. அவர்கள் என் வாழ்வில் எப்போதும் துணை நின்று வழி நடத்துபவர்கள்.. இருந்தாலும் என் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் விரைவில் புதிய அனுபவங்களுடன் இன்னொரு தொடர் வழியாக உங்களை சந்திக்கும் வரை..
என்றும் அன்புடன்கடல்கணேசன்.
ஆகவே, தங்களது கடற்பயணம் நன்றாய் அமைந்து, இன்னும் வேறு சில அனுபவங்களை மீண்டும் ஒரு தொடராய்எழுதும் போது அதனை வாசிக்கும் வாசகனாய் காத்து இருக்கிறேன்.
வலைப்பக்கம் : http://kadalganesan.blogspot.com/
நன்றி கணேசன்..,

Tuesday, February 13, 2007

காதல் செய் பிறைக்காலம் முழுமையும்..,


நான் நிலாப்பெண்
நீ பூமியின் பையன்..

நான் உன் பெண்
நீ எந்தன் ஆண்

நான் உன் காதலி
நீ எந்தன் காதலன்.

ஊரே எனைப் பார்க்கையில்
நானோ உனைத் தேடிப் பிடித்து,
சிறுகச் சிறுக காண்பித்து, வெட்கமுற்று,
இரண்டாம்பிறை, மூன்றாம்பிறையென
என் காதலின் நிலை உணர்த்துகிறேன்.
ஆனால், நீயோ பார்க்க மறுத்து
தூங்கிப் பொழுதை கழிக்கிறாய்...

எனக்கு தெரிந்த காதல்
உனக்கு தெரியாமற் போனதெப்படி?

ஆம் நான் இயற்கைப் பெண்,
இயற்கை பெற்றெடுத்தவன்தானே நீ
உனக்கு எப்படி தெரியும் என் காதல்?

எனது வாழ்க்கை அர்த்தமுற
உனது காதல் வேண்டும் எனக்கு ,
பூமிப் பந்தினை எட்டி உதைக்கும் வீரனாய் மாற
எனது காதல் வேண்டும் உனக்கு
ஆதலால் காதல் செய்...

நான் இப்போது தேய்கிறேன்
அமாவாசையாய் என் வெறுமை தெரியும்.
நான் இல்லாது இருத்தல் என் நிலை உணர்த்தும்
என் காதல் உணர்வாய்
நீ சாக ஆரம்பிப்பாய்...

உனை உயிர்ப்பிக்க
மீண்டும் வருவேன்
பெளர்ணமியாய்
என் முழுமை உணர்த்துவேன்
காதலாய் கசிந்துருக என்னவனாய் தயராய் இரு ...
எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்
அன்பெனும் மைகொண்டு நான் ...

நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதாலால் நீ எனைக் காதல் செய்

மீண்டும் மீண்டும் தேய்ந்து,வளர்ந்து
நான் இன்னமும் அதிகமாய் உன்னில் காதலுறுவேன்
உனக்கு காதல்நிலை உணர்த்துவேன்
என் வாழ்நாள் முழுமையும்...

ஆம் நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதலால் நீ எனைக் காதல் செய்
பிறைக் காலம் முழுமையும்...

Monday, February 05, 2007

தலைவியின் புகழ் பாடி

200 பதிவு கண்ட தலைவியின் புகழ் பாடி ஒரு தொண்டனின் குரல்.

கி.பி. 2005,நவம்பர் திங்கள் 5ஆம் நாள் இந்த வலையுலகிற்கு அடியெடுத்து வைத்து, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தமிழ் தொண்டாற்றி வரும் எங்களின் தலைவி(வலி), எண்ணங்களின் அரசி, தானே தலைவி(தலைவி என்று தானே கூறிக்கொள்ளுவதால், இன்று முதல் தானைத்தலைவி இனி தானே தலைவி) கீதா சாம்பசிவம் அம்மா அவர்கள் (அது என்ன உங்களுக்கும் பச்சைகலர் பிடிச்சுருக்கு) 200 பதிவுகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார்கள். அவர்களது கரங்களுக்கு தங்கப் பேனா பரிசு அளிக்கலாம் என்று தான் எண்ணினேன். ஆனா தலைவி இப்ப எல்லாம் தங்கமும் பிடிப்பது இல்லை,பேனாவும் பிடிப்பது(கையில) இல்லை என்று கூறியதால் தலைவிக்காக , இந்த "இருக்கு ஆனா இல்லை கீ போர்டை "(Bluetooth Laser Virtual Keyboard)

உங்களின் பொற்பாதங்களில்..சீ. உங்கள் பொற்கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இனி உங்களின் கரம் பட்டு இந்த கீ போர்டு புனிதம் அடையட்டும்.இனி உங்கள் பதிவை மட்டுமா தேடப்போறீங்க..இந்த கீபோர்டையும் சேர்த்து தேடி முடிந்தால் பதிவுகளை இட்டு எங்கள் head letter ஐ நீங்கள் கேள்விகுறி ஆக்கலாம். அப்புறம் கட் அவுட் வைக்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் நாள் எஸ்கேப் ஆகலாம் என்று நினைத்து தலைவியிடம் சொன்னால் தலைவி அப்ப அப்ப போஸ்ட போட்டு எங்கடா கட்-அவுட்னு மிரட்டல் வேற பன்ன ஆரம்பிச்சுட்டாங்க.. சரினு கட்-அவுட் வைக்கலாம்னு முயற்சி பன்னினா இங்க சின்சினாட்டில இருக்குற மக்களுக்கு கட்-அவுட் கலாசாரம்னா என்னனு தெரியவில்லை. ஒரு பாலாபிசேகம் பண்ண முடியல. சே என்னடா உலகம் இது என்று மனம் வெதும்பி, இந்த கலாசாரம் தெரியாத இடத்தில் வைத்து என்ன புண்ணியம் என்று நினைத்து, கட்-அவுட் கலாசாரம் புரிந்த சிங்கார சென்னையிலோ அல்லது தலைவியினை நமக்கு அளித்த மதுரை மாநகரிலோ வைக்கலாம் என்று முடிவு பண்ணி கட் அவுட் பணியினை தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளேன். இப்போதைக்கு எதோ இந்த தொண்டனால் விடாது பனிமழையிலும் அடாது தலைவியின் புகழ் பரப்ப எனது கரங்களலால் இந்த MS-PAINT பேனரை

பனிமலைக்கு பக்கத்தில் நட்டுவிட்டு வந்துள்ளேன்...தலைவி வாழ்க..அவரது தமிழ்த் தொண்டு வாழ்க வாழ்க..

ஓகே. ஓகே, தலைவிக்கு ரொம்ப புகழ் பிடிக்காது..அதனால் புகழ்ந்தது போதும் என்று இத்துடன் நிறுத்தி கொண்டு விசயத்திற்கு வருகிறேன்..

உங்களின் பக்கங்களை சில மாதங்களுக்கு முன்னால்தான் வாசிக்க ஆரம்பித்தேன். 200 பதிவுகள் முழுவதும் படித்தது இல்லை(அப்பாட நீ தப்பிச்சனு நாட்டாமை சொல்வது காதுல கேட்குது) ஆனால் படித்த சிலதில் தெரியாத பல கண்டு ,உங்களின் எழுத்தின் ரசிகனாய் ,படித்து சந்தோசபடும் ஒருவனாய் இந்த சில காலங்களில் மாறிவிட்டேன்...

மனதின் வெளிப்பாடுகளாய்
தெளித்து விட்ட உங்களின்
எண்ணங்கள்
காலத்தின் குறியீடுகளாய்
நுற்றாண்டுகளுக்கு அப்பாலும்!!!


இன்னும் நிறைய எழுதுங்கள், வாசிக்க காத்து இருக்கிறோம் இக்காலத்தில் நானும்,
இன்னுமொரு காலத்தில் யாரொ ஒருவனும்..

வலைப்பக்கம்:
எண்ணங்கள்

Wednesday, January 31, 2007

இன்னுமோர் காலண்டர் கவிதை


என் மடிக்கணினியின் வலது ஒரத்தில்
மறைந்து இருக்கும் காலண்டர் நினைவுறுத்தியது எனது பழைய
தேதி கிழித்தலை..

எனக்கு முன்னமே யாரோ
கிழித்துவிட்டுப் போனகாலண்டரில்
நானும் தேதி கிழித்து,கிழமைபார்த்து
தவறாய் அட்டவணைபடுத்திய
என் புத்தக சுமையில், இல்லாது போன
என் வரைய முடியா ஓவியநோட்டிற்காக
வாங்கிய பிரம்படியும்,
அந்த குட்டை மீசை வாத்தியாரும்...

கிழித்தும் தூக்கி எறியாமல் அலமாரிக்குள்
பத்திரப் படுத்திய எனது தேதிகளுக்கு பின்னால்
என்னவளின் பார்வையோ,சிரிப்போ இருக்கத்தான் செய்தன...

இப்போதோ எனது நாட்காட்டி
லோட்டஸ் மின்னஞ்சலின் உதிரிப்பாகமாய்
அடுத்த டீம் மீட்டிங்கை அலர்ட்டாய் சொல்லிப்போனது...

என் மடிக் கணினியின் வலது ஓரத்திலும்,மின்னஞ்சலிலும்
கிழிக்கமுடியாமல் இருக்கத்தான் செய்கின்றது
நினைவுகளற்ற எனது இப்போதைய நாட்காட்டி...

Thursday, January 25, 2007

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!!!

நாட்டு வணக்கம்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?


58வது குடியரசு தினம் மிக சிறப்பாக எல்லா இந்தியனாலும் கொண்டாடப்பட்டு இருக்கும்.ஒரு இந்தியனாய் கொடி பட்டொளி வீசி பறப்பதினை பார்க்க முடியாவிட்டாலும்,பழைய நினைவுகளை அசைபோட்டு ,முண்டாசுப் புலவனுடன் சேர்ந்து என் நாட்டினை வணங்குவதில் பெருமை அடைகிறேன்.

இந்த நாள், நான் இந்தியாவில் இருந்து இருந்தால் குடியரசுதின அணிவகுப்பு விழாவினை பார்க்க தொலைக்காட்சி பெட்டியின் முன் ஆஜர் ஆகி இருந்திருப்பேன்.. கல்லுரிகாலத்தில் இன்னும் சிறப்பாய், நானும் அணிவகுப்பில்... முதல் வருடம் சாதாரன கேடட்டாய் அணிவகுப்பில் கலந்துகொண்டு மூவர்ண கொடியினை பார்த்து ஒரு சல்யூட். இரண்டாவது வருடம் கார்பரலாய் உயர்ந்து, கல்லுரி முதல்வரை அழைத்து வர பைலட்மார்ச். (அந்த கழுத்து பட்டை,வெள்ளை நிற கையுறை,மார்பில் குறுக்காய் ஒரு பட்டை,பூட் என தனி மதிப்பு).முன்றாவது வருடம் CUO வாக தேர்ந்தெடுக்கபட்டு, கார்டு காமண்டாராய் இருந்து , கார்டு ஆப் கார்னரில்(நிறைய வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியவில்லை) துப்பாக்கியினை உயர்த்தி, கொடிக்கு வணக்கம் செலுத்தியதில் ஒரு இந்தியனாய் கர்வம் கொண்டு திரிந்த அந்த காக்கி உடை காலம் திரும்பி பெற முடியாத இனிமை யான காலம்..

எல்லா தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் , ஒவ்வொரு இந்தியனுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
இந்திய அரசியல் சாசன சட்டம் நிறைவேறிய

இந்நாளில் நமது அரசியல் சட்டங்களை மதித்து

இந்தியனாய் அதை பேணி காப்பதில் உறுதி பூனுவேன்!
வெல்க பாரதம் !


வாழ்க தாய்த்திரு நாடு!


ஜெய்ஹிந்த்!!!


இணையத்தில் உலாவும்போது இந்த http://mha.nic.in/nationalflag2002.htm இணையப்பக்க்த்தினை பார்த்திட நேர்ந்தது. தெரியாத விசயங்கள் எத்துனை உள்ளன.

Sunday, January 14, 2007

தைத் திருநாள் வாழ்த்து!!!பழையன கழிந்து
புதியன புகுந்து
மழையின் கருணையும்
சூரியனின் பார்வையும் பட்டு
பசுமைநிலம் முன்னேஅலங்கரித்த கோலமும்
மஞ்சள் கொத்துகளுடன்
மண்பானையில் பொங்குகிறது பொங்கல்!!!
மாடுகள் கொம்புதிருத்தி
வீரம் காட்டி, மீசை முறுக்கி
எம் தமிழனின் வாழ்வு
செங்கரும்பின் தீஞ்சுவையாய்
எல்லா காலமும்!!!என் உழவனே வாழி நீ!
வாழி உன் நிலம்!
வாழி உன் கால்நடை!
வாழி நீ பல்லாண்டு!

உன் மண்ணில் விழும் வியர்வைதுளிகளுக்கு நன்றி!!!


Sunday, January 07, 2007

எனது நேற்றைய கிழமை...


நாட்காட்டியில்
ரசித்து சந்தோசித்த
எனது நேற்றைய கிழமை
கிழிக்கப் படுகிறது
என் விரல்களால்...


ஏதேனும் ஒன்றை மிழுங்கிக் கொண்டு
அதிகமாகிப் போன அகவையும்
இன்னும் ஓர் நேற்றைய நினைவுகளுமாய்
புத்தம் புது நாள்...

உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?

Thursday, January 04, 2007

சனவரி 3 ,நண்பனுக்கு கல்யாணம்...
எனது கல்லூரிகால நட்பு மிகவும் அழகான,ரசிக்கத்தக்க,கிடைத்தற்கரிய,போற்றுதற்
குரியது.. நாங்கள் மட்டுமே பேசி திரியாமல் வீட்டில் ஒருவனாய், சரி தவறு உணர்த்தி,போறாமைபடாமல், நட்பு பாரட்டிய அழகிய நிலாக் காலம் அது...ஒரே பெஞ்சில் அருகருகில் அமர்ந்து ஊர் சுற்றி, எதிர்காலம் பேசி, நட்பாய் திரிந்த என் கல்லூரி காலம் மிக அருமையானது. அந்த நட்புகளில் ஒருவன் "ஜியாவுல் ரஷ்மான்".மதுரையிலிருந்து அவனது அப்பாவின் பணிமாறுதல் காரணமாய் திண்டுக்கல் வந்து நான் படித்த கல்லூரியில் அவனும் சேர்ந்து ,பார்த்து பழகி ,சண்டையிட்டு, சமாதானம் பேசி ,முதுநிலை கல்லூரியிலும் ஒன்று சேர்ந்து ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரே அறையில் தங்கி ,தூங்கி, கொஞ்சமாய் படித்த காலங்கள் பசுமையானது.வேலை நிமித்தம் காரணமாய் அவன் துபாய் சென்ற போது எனை அழைத்து அம்மா அப்பா வந்தா நான் போவேனெ என்று தெரியாது .அதனால்நீ வாடா னு சொல்லி நான் மட்டும் திண்டுக்கல்லிருது கிளம்பி, இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து கையசைத்து வழியணுப்பி வைத்தது..

எனது நண்பர்கள் கூட்டத்தில் முதன் முதலாய் வெளிநாடு சென்றவன் இவனே..அதற்கு பிறகு எப்போதாவது தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் உரையாடி எப்போதடா வருவாய் என்று வினவி, எப்போது இந்தியா வந்தாலும் பார்த்து ,பேசி, என்னுடன் நேரம் கழிப்பான். இதோ ஆண்டுகள் கரைந்து இப்போது நானும் வெளிநாட்டில்,அவனும் வெளிநாட்டில். மூன்று மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு நான் தொலைபேச,நலவிசாரித்தலுக்கு பின்னால் , வீட்ல பொன்னு பார்த்தாச்சுட,அநேகமாய் ஜனவரியில் கல்யாணம் இருக்கும் நீ வந்துடு என்று சொல்ல, நானோ வேகமாய்தலை ஆட்டி கட்டாயம் வந்துடுவேன் என்று சொன்னென்..

இதோ நேற்று அவனுக்கு கல்யாணம்... நானோ விடுப்பு கிடைக்காத காரணத்தினாலும் இன்னும் சில காரணத்தினாலும் போக முடியவில்லை.முன்னமே அழைத்து நான் வரமுடியுமானு தெரியலடானு என்று சொல்ல , அவனோ வருவதற்கு வழியபாருனு சொல்லிவிட்டு உடனே தொலைபேசியினை வைத்துவிட்டான்.

எனது மற்ற நண்பர்கள் அனைவரும் ஆஜராகி ,கேளி பேசி , நட்பு பாரட்ட நானோ இங்கு என் அடைபட்ட சுவரிலிருந்து வாழ்த்து சொல்ல தொலைபேசினேன்..
சாரிடா என்னால வரமுடியலா. WISH YOU A HAPPY MARRIED LIFE DA ணூ சொல்ல, ஒகே டா..ஒன்னும் இல்ல. இன்னும் ரெண்டு நாள் கழித்துபேசு, நாம ஃபிரியா பேசலாம் என்று தன் பெருந்தன்மையை காட்டினான்.
தனது வாழ்க்கைத் துணையை கைபிடித்து, அவனது மற்றுமோரு அழகான வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்ற குறளின் படியும்,
"பாயும் ஒளியாய் உன்னவளும்,
பார்க்கும் விழியாய் நீயும்,
காதலாய் உன்னவளும், காந்தமாய் நீயும்,
வேதமாய் உன்னவளும்,வித்தையாய் நீயும்
பொங்கி வரும் தீஞ்சுவையாய் உன் வாழ்க்கை",
என்ற பாரதியின் வார்த்தைகள் படியும்
உன் வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகிறேன்..
வாழ்க மணமக்கள்!வாழி பல்லாண்டு!!!

வாழ்க்கையில் ஒரே முறை நடக்கும் ஒரு நண்பனோட கல்யாணத்திற்கு வந்து , நேரில் பார்த்து , வாழ்த்து தெரிவிக்கா முடியாமல் அப்படி வேலை பார்த்து, பணம் சேர்த்து என்ன செய்ய போற என்று கேட்ட எனது மற்றுமொரு நண்பனின் கேள்விக்கு விடைதெரியாமல் ,வெட்க படாமல் நானும் சொல்லுகிறேன் எல்லாரிடமும்
நான் அமெரிக்காவில இருக்கேன்.!!!