Wednesday, January 31, 2007

இன்னுமோர் காலண்டர் கவிதை


என் மடிக்கணினியின் வலது ஒரத்தில்
மறைந்து இருக்கும் காலண்டர் நினைவுறுத்தியது எனது பழைய
தேதி கிழித்தலை..

எனக்கு முன்னமே யாரோ
கிழித்துவிட்டுப் போனகாலண்டரில்
நானும் தேதி கிழித்து,கிழமைபார்த்து
தவறாய் அட்டவணைபடுத்திய
என் புத்தக சுமையில், இல்லாது போன
என் வரைய முடியா ஓவியநோட்டிற்காக
வாங்கிய பிரம்படியும்,
அந்த குட்டை மீசை வாத்தியாரும்...

கிழித்தும் தூக்கி எறியாமல் அலமாரிக்குள்
பத்திரப் படுத்திய எனது தேதிகளுக்கு பின்னால்
என்னவளின் பார்வையோ,சிரிப்போ இருக்கத்தான் செய்தன...

இப்போதோ எனது நாட்காட்டி
லோட்டஸ் மின்னஞ்சலின் உதிரிப்பாகமாய்
அடுத்த டீம் மீட்டிங்கை அலர்ட்டாய் சொல்லிப்போனது...

என் மடிக் கணினியின் வலது ஓரத்திலும்,மின்னஞ்சலிலும்
கிழிக்கமுடியாமல் இருக்கத்தான் செய்கின்றது
நினைவுகளற்ற எனது இப்போதைய நாட்காட்டி...

Thursday, January 25, 2007

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!!!

நாட்டு வணக்கம்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?


58வது குடியரசு தினம் மிக சிறப்பாக எல்லா இந்தியனாலும் கொண்டாடப்பட்டு இருக்கும்.ஒரு இந்தியனாய் கொடி பட்டொளி வீசி பறப்பதினை பார்க்க முடியாவிட்டாலும்,பழைய நினைவுகளை அசைபோட்டு ,முண்டாசுப் புலவனுடன் சேர்ந்து என் நாட்டினை வணங்குவதில் பெருமை அடைகிறேன்.

இந்த நாள், நான் இந்தியாவில் இருந்து இருந்தால் குடியரசுதின அணிவகுப்பு விழாவினை பார்க்க தொலைக்காட்சி பெட்டியின் முன் ஆஜர் ஆகி இருந்திருப்பேன்.. கல்லுரிகாலத்தில் இன்னும் சிறப்பாய், நானும் அணிவகுப்பில்... முதல் வருடம் சாதாரன கேடட்டாய் அணிவகுப்பில் கலந்துகொண்டு மூவர்ண கொடியினை பார்த்து ஒரு சல்யூட். இரண்டாவது வருடம் கார்பரலாய் உயர்ந்து, கல்லுரி முதல்வரை அழைத்து வர பைலட்மார்ச். (அந்த கழுத்து பட்டை,வெள்ளை நிற கையுறை,மார்பில் குறுக்காய் ஒரு பட்டை,பூட் என தனி மதிப்பு).முன்றாவது வருடம் CUO வாக தேர்ந்தெடுக்கபட்டு, கார்டு காமண்டாராய் இருந்து , கார்டு ஆப் கார்னரில்(நிறைய வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியவில்லை) துப்பாக்கியினை உயர்த்தி, கொடிக்கு வணக்கம் செலுத்தியதில் ஒரு இந்தியனாய் கர்வம் கொண்டு திரிந்த அந்த காக்கி உடை காலம் திரும்பி பெற முடியாத இனிமை யான காலம்..

எல்லா தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் , ஒவ்வொரு இந்தியனுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
இந்திய அரசியல் சாசன சட்டம் நிறைவேறிய

இந்நாளில் நமது அரசியல் சட்டங்களை மதித்து

இந்தியனாய் அதை பேணி காப்பதில் உறுதி பூனுவேன்!
வெல்க பாரதம் !


வாழ்க தாய்த்திரு நாடு!


ஜெய்ஹிந்த்!!!


இணையத்தில் உலாவும்போது இந்த http://mha.nic.in/nationalflag2002.htm இணையப்பக்க்த்தினை பார்த்திட நேர்ந்தது. தெரியாத விசயங்கள் எத்துனை உள்ளன.

Sunday, January 14, 2007

தைத் திருநாள் வாழ்த்து!!!பழையன கழிந்து
புதியன புகுந்து
மழையின் கருணையும்
சூரியனின் பார்வையும் பட்டு
பசுமைநிலம் முன்னேஅலங்கரித்த கோலமும்
மஞ்சள் கொத்துகளுடன்
மண்பானையில் பொங்குகிறது பொங்கல்!!!
மாடுகள் கொம்புதிருத்தி
வீரம் காட்டி, மீசை முறுக்கி
எம் தமிழனின் வாழ்வு
செங்கரும்பின் தீஞ்சுவையாய்
எல்லா காலமும்!!!என் உழவனே வாழி நீ!
வாழி உன் நிலம்!
வாழி உன் கால்நடை!
வாழி நீ பல்லாண்டு!

உன் மண்ணில் விழும் வியர்வைதுளிகளுக்கு நன்றி!!!


Sunday, January 07, 2007

எனது நேற்றைய கிழமை...


நாட்காட்டியில்
ரசித்து சந்தோசித்த
எனது நேற்றைய கிழமை
கிழிக்கப் படுகிறது
என் விரல்களால்...


ஏதேனும் ஒன்றை மிழுங்கிக் கொண்டு
அதிகமாகிப் போன அகவையும்
இன்னும் ஓர் நேற்றைய நினைவுகளுமாய்
புத்தம் புது நாள்...

உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?

Thursday, January 04, 2007

சனவரி 3 ,நண்பனுக்கு கல்யாணம்...
எனது கல்லூரிகால நட்பு மிகவும் அழகான,ரசிக்கத்தக்க,கிடைத்தற்கரிய,போற்றுதற்
குரியது.. நாங்கள் மட்டுமே பேசி திரியாமல் வீட்டில் ஒருவனாய், சரி தவறு உணர்த்தி,போறாமைபடாமல், நட்பு பாரட்டிய அழகிய நிலாக் காலம் அது...ஒரே பெஞ்சில் அருகருகில் அமர்ந்து ஊர் சுற்றி, எதிர்காலம் பேசி, நட்பாய் திரிந்த என் கல்லூரி காலம் மிக அருமையானது. அந்த நட்புகளில் ஒருவன் "ஜியாவுல் ரஷ்மான்".மதுரையிலிருந்து அவனது அப்பாவின் பணிமாறுதல் காரணமாய் திண்டுக்கல் வந்து நான் படித்த கல்லூரியில் அவனும் சேர்ந்து ,பார்த்து பழகி ,சண்டையிட்டு, சமாதானம் பேசி ,முதுநிலை கல்லூரியிலும் ஒன்று சேர்ந்து ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரே அறையில் தங்கி ,தூங்கி, கொஞ்சமாய் படித்த காலங்கள் பசுமையானது.வேலை நிமித்தம் காரணமாய் அவன் துபாய் சென்ற போது எனை அழைத்து அம்மா அப்பா வந்தா நான் போவேனெ என்று தெரியாது .அதனால்நீ வாடா னு சொல்லி நான் மட்டும் திண்டுக்கல்லிருது கிளம்பி, இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து கையசைத்து வழியணுப்பி வைத்தது..

எனது நண்பர்கள் கூட்டத்தில் முதன் முதலாய் வெளிநாடு சென்றவன் இவனே..அதற்கு பிறகு எப்போதாவது தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் உரையாடி எப்போதடா வருவாய் என்று வினவி, எப்போது இந்தியா வந்தாலும் பார்த்து ,பேசி, என்னுடன் நேரம் கழிப்பான். இதோ ஆண்டுகள் கரைந்து இப்போது நானும் வெளிநாட்டில்,அவனும் வெளிநாட்டில். மூன்று மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு நான் தொலைபேச,நலவிசாரித்தலுக்கு பின்னால் , வீட்ல பொன்னு பார்த்தாச்சுட,அநேகமாய் ஜனவரியில் கல்யாணம் இருக்கும் நீ வந்துடு என்று சொல்ல, நானோ வேகமாய்தலை ஆட்டி கட்டாயம் வந்துடுவேன் என்று சொன்னென்..

இதோ நேற்று அவனுக்கு கல்யாணம்... நானோ விடுப்பு கிடைக்காத காரணத்தினாலும் இன்னும் சில காரணத்தினாலும் போக முடியவில்லை.முன்னமே அழைத்து நான் வரமுடியுமானு தெரியலடானு என்று சொல்ல , அவனோ வருவதற்கு வழியபாருனு சொல்லிவிட்டு உடனே தொலைபேசியினை வைத்துவிட்டான்.

எனது மற்ற நண்பர்கள் அனைவரும் ஆஜராகி ,கேளி பேசி , நட்பு பாரட்ட நானோ இங்கு என் அடைபட்ட சுவரிலிருந்து வாழ்த்து சொல்ல தொலைபேசினேன்..
சாரிடா என்னால வரமுடியலா. WISH YOU A HAPPY MARRIED LIFE DA ணூ சொல்ல, ஒகே டா..ஒன்னும் இல்ல. இன்னும் ரெண்டு நாள் கழித்துபேசு, நாம ஃபிரியா பேசலாம் என்று தன் பெருந்தன்மையை காட்டினான்.
தனது வாழ்க்கைத் துணையை கைபிடித்து, அவனது மற்றுமோரு அழகான வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்ற குறளின் படியும்,
"பாயும் ஒளியாய் உன்னவளும்,
பார்க்கும் விழியாய் நீயும்,
காதலாய் உன்னவளும், காந்தமாய் நீயும்,
வேதமாய் உன்னவளும்,வித்தையாய் நீயும்
பொங்கி வரும் தீஞ்சுவையாய் உன் வாழ்க்கை",
என்ற பாரதியின் வார்த்தைகள் படியும்
உன் வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகிறேன்..
வாழ்க மணமக்கள்!வாழி பல்லாண்டு!!!

வாழ்க்கையில் ஒரே முறை நடக்கும் ஒரு நண்பனோட கல்யாணத்திற்கு வந்து , நேரில் பார்த்து , வாழ்த்து தெரிவிக்கா முடியாமல் அப்படி வேலை பார்த்து, பணம் சேர்த்து என்ன செய்ய போற என்று கேட்ட எனது மற்றுமொரு நண்பனின் கேள்விக்கு விடைதெரியாமல் ,வெட்க படாமல் நானும் சொல்லுகிறேன் எல்லாரிடமும்
நான் அமெரிக்காவில இருக்கேன்.!!!