Sunday, February 25, 2007

18,குமரன்திரு நகர்,திண்டுக்கல்-624005


"எல்லா இடங்களிலும் எப்படிச் சுற்றித் திரிந்தாலும்,என்னவாகிப் போனாலும் நான் நானகிப் போவது என் வீட்டில் மட்டுமே."

இப்படித்தான் எனது முதற்பதிவினை எழுதி வலைவீட்டினை ஆரம்பித்தேன். உருவமற்ற சுவர்களை கட்டியதற்கே நான் எல்லையில்லா சந்தோசம் அடைந்த போது, உண்மையாகவே சுவர் எழுப்பினால்...


ஆம், எனது நீண்ட நாள் ஆசை கடந்த திங்கள் கிழமை(பிப்ரவரி-26) நிறைவேறியது.
நான் பிறந்து ,அழுது,சிரித்து,தவழ்ந்து,விளையாண்டு,கனவுற்று,கோபமுற்று,களவுற்று
உண்மையறிந்து என எனக்கு எல்லாம்சொல்லிதந்த என் குடிசை வீடு மச்சிவீடாய் ஆகிப் போனது. எனக்கு அந்த செங்கல்லின் ஈரம் தெரியாது,ஜன்னல் கம்பியின் எடைதெரியாது,என் வீட்டுகதவின் வாசம் தெரியாது.சிமெண்ட் மூட்டையின் விலை தெரியாது.குவித்த மணலில் விளையாடி,சரித்துவிட்டு போகும் குட்டிப் பிள்ளைகளை பார்த்திடவும் இல்லை.
வேலையாட்களுக்கு டீ,வடை வாங்கித்தந்ததும் இல்லை.ஆம்,நான் பார்த்து பார்த்து கட்டவில்லை ஆனாலும் சந்தோசமுறுகிறேன் என் ஆசை நிறைவேறிப் போனதில்.


"மணி ஒன்னும் கவல படாத,அம்சமா கட்டிபுடலாம் ".கொத்தனார் அண்ணா மருதமுத்து,முதல் நாள் தொலைபேசிய போது சொன்ன வார்த்தை. செய்தும் முடித்து விட்டார்.இதோ வேலை எல்லாம் முடிந்து ,அப்பாவும்,அம்மாவும் போனவாரம் தொலைபேசும்போது,எல்லா வேலையும் முடிஞ்சுடுப்பா.இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அத பால் காய்ச்சிட்டு பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லிய போது மனசுக்குள் எதோ சின்னதாய் சந்தோசம்.அப்படியே அப்பா சொன்ன வார்த்தைகளும் மனதுக்குள் மத்தாப்புகளை தெளித்துவிட்டு போனது.

ஆம் வெறும் நிலம் மட்டும் வாங்கி அதனை என் விருப்ப படி கட்டி போகும் சாதரண வீடு அல்ல.. புங்கை,வேம்பு,முல்லை,இட வல திண்ணை,மண் தரை, தென்னங் கீற்றுமாய் குளிர்ச்சியாய்த்தானிருந்தது என் சின்னஞ்சிறு வயதுவிடு.காலம் மாற எனது வீடும் உருமாறியது.வீட்டிற்கு வெளிய சாலை போடுகையில் நான் ஊஞ்சலாடிய எங்கள் புங்கை போய் என்வீட்டிற்குள்ளே சிமெண்ட் தரை எட்டிபார்க்கையில் சாணி பூசிய என் அம்மாவின் கைகளுக்கு விடுதலை.என் கடைசி அக்காவோ விதவிதமான கோலத்துடன் சின்னஞ்சிறு தெருவையே வாசல் முற்றமாக்கினாள். அண்ணாவின் தயவினால் ,பிறகு சிறிது சிறிதாய் உருமாறினாலும் என் கனவு என்னுடனே வளர்ந்து கொண்டுதானிருந்தது. நாம சம்பாதித்து இந்த வீட்ட கட்டனும்,அப்பா,அம்மா அதுல சந்தோசமா அவர்களுடைய காலத்த கழிக்கனும் அவங்களுக்கு பிடித்த மாதிரினு என் ஆசைமனதுக்குள் இருந்து கொண்டுதானிருந்தது.இதோ இப்போது,இன்னும் உருமாறி புது பொலிவுடன் சந்தோசம் தருகிறது என் பழைய புதியவீடு.என்ன கொஞ்சம் தாமதாமா பண்ணிட்டேனோனு தோனுது.

18,குமரன் திருநகர் திண்டுக்கல்-5
வாசித்து பார்த்தால் முகவரிதான்
வசிக்க போகும் எனக்கோ
என் முகமும்-அரியும் நீதான்.


சேதபடுத்தினாலும்
சிரித்து சந்தோசம் தர
உன்னால் மட்டுமே முடியும்


உன்னால் மட்டும் எப்படி
இத்துனை ஆண்டானாலும்
அதே வாஞ்சனையுடன்
என்னை தழுவ முடிகிறது
ஓ, என் அம்மா கரம் பட்டு
நீயும் கத்துக் கொண்டாயோ...

நான் விட்டுப் போவதற்கு நீ சுவடு அல்ல
என் சந்ததியினை சொல்லும்
வரலாறு நீ...

நன்றி என் இல்லமே
உன் வரலாற்றின் ஒரு பக்கத்தில்
எனையும் இருத்தியமைக்கு...

நீ இன்று போல் என்றும்
வசந்தம் வீசு,
அன்பு காண்பி,
கருணை காட்டு,
இன்னும் புதியதாய் பலவும்
என் வரும் சந்ததிக்கும் ...

அப்பா,அம்மா பெருமை அடைந்தார்கள்.அக்கா-மாமா,அண்ணா -அண்ணி,குட்டிக் குழந்தைகள் சந்தோசமுற்றனர். நான் இங்கே இருந்துகொண்டு என் வலைப் பக்கத்தில் எழுதிப் பார்த்து சின்னதாய் ஆனந்தம் அடைகிறேன்.


"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேனி
பிள்ளைகள் பேனி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவது இல்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவது இல்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும்
விளங்க இடைவிடாது மனம் உருகி
மகிழ்ச்சியில் திளைத்திட...."

ஆசைகளாலும், கனவுகளாலும் ,மகிழ்சியாலும் நிரம்பி எனது வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது என் ஆசை விடு . காத்து இருக்கிறேன் நானும்...

Sunday, February 18, 2007

கற்றது கடலளவு


தலைப்ப பார்த்துட்டு யாரவது கடல் கணேசன் கிட்ட போய் போட்டு குடுத்து எனக்குஅவர் ஆட்டோ அனுப்பற மாதிரி செஞ்சுடாதிங்க. மேட்டர படிச்சுட்டு எதுவா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வாங்க.
"கற்றது கடலளவு - கடைசி அத்தியாயம் 50 "
இப்படித்தான் கடல்கணேசனின் 50 வது பதிவில் தலைப்பு இடம் பெற்றிருந்தது. பார்த்ததும் அட தொடர் முடிஞ்சுபோயிடுச்சானு மனசுக்குள்ள ஒரு சின்ன ஏக்கம். ஆதனால் கற்றது கடல் அளவுனு நம்ம பக்கத்துல தலைப்ப போட்டுகிட்டு சின்னதா சந்தோசப் படுறதுல ஒரு சுகம் மற்றும்ஆனந்தம்தான்.இது ஒரு கடலளவின் முடிவுஅல்ல, ஒரு கடல்துளியின் முடிவுதான் என்று எனது மனதிற்குள் தோன்றியது. ஆம் இன்னும் சில புது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது இது ஒரு துளியின் முடிவுதான் . ஆனந்த விகடன் மூலமாய் கடல் கணேசன் தமிழகம் முழுவதும் அறிந்த ஒரு எழுத்தாளார். அவரின் எழுத்துகளை இதற்கு முன்னால் நான் வாசித்திருக்க வில்லை. நான் ஆனந்தவிகடன் படிக்க ஆரம்பித்த போது அவர் விகடனில் எழுத்து பணியினை நிறுத்துவிட்டு கடல் தண்ணியின் உப்பு காற்றினை சுவாசிக்க சென்றுவிட்டார்.ஆனால் கடவுள் கடவுள்தான்.சில நல்ல எழுத்துகளை வாசிக்கமால் எப்படியாடா உலகில் நீ இருக்க முடியும் என்று என்னி எனக்கொரு வாய்ப்பு அளித்தான். நல்ல எழுத்துகளை வாசிக்க எப்போதும் வாய்ப்புகளை அவன் ஏற்படுத்தியே தருவான்.இதோ அந்த வாய்ப்பினைஎனக்கு அளித்த போது நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றே நினைக்கிறேன்.ஆம்.நிறைய முறை சில வாசிப்புகளைபல புத்தகங்களில்படித்துவிட்டு கருத்து சொல்லலாம் என்று நான் என்னி, அதனை செயல் படுத்தி மடலிட்டு எதுவும் பிரசுரிக்கபடாமல் எழுத்தாளனை சென்றடைந்ததா,இல்லையாஎன்று பல நாள் எண்ணியிருந்தேன். ஆனால் முதல் முறையாக ஒரு எழுத்தாளனின் படைப்புகளைவாசித்துவிட்டு, அதனை பற்றி கருத்து சொல்லி, அதற்கு பதில் கருத்தும் அறிந்து ,அவருடனே உரையாடவும் செய்தபோது நான் பெரு உவகை அடைந்தேன்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாய் 50 பதிவுகளுக்கும் மேல் ஒரு தொடர் எழுதி, தன் அனுபவங்களை சொல்லி ஒவ்வொரு பதிவிலும் ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கிபல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட கடல் கணேசன் அவர்களுக்கு நன்றி. நான் அவர் எழுதின தொடர ஆபரேசன் செஞ்சு இது அப்படி,அது இப்படினு சொல்லப்போறது இல்ல. ஏனேனில் எனக்கு அவ்வளவு தமிழ் அறிவும் கிடையாது.பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்யும் அளவுக்கு மிகப் பெரியவாசகனும் இல்லை. மிகச் சாதரன வாசகனாய் அவர் எழுத்தில் கவரப்பட்டு சில அத்தியாயங்களில் மனது நிறைய சோகங்களுடன்,சிலதில் சந்தோசங்களுடன் வேறு சிலவற்றில் பல கேள்விகளுடன்தூங்கிப் போயுள்ளேன். அதற்காய் , அந்த எழுத்தாளனுக்கு நன்றி சொல்ல ஆசைப் பட்டே இந்த நீண்ட பதிவு.

நீங்கள் வேறு ஒரு வலைப்பக்கத்தில் எழுதி இருக்கும்போது உங்களது சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தேன். அதில் சந்துரு என்ற கட்டுரைபடித்து, நான் அழுத போதுதான் உங்களது எழுத்துகளை நேசிக்க ஆரம்பித்தேன். பிறகு நீங்கள் இந்த வலைப்பக்கத்தினை தொடங்கி பல எழுத்துகளை அளித்த போது அதனை வாசித்து, பிறகு உங்களுடன் பேச ஆரம்பித்த போது ,நிஜமாய் சொல்லுகிறேன் என் மனதிற்குள் ஒரு இனம் புரியா சந்தோசம்.. ஒரு எழுத்தாளனுடன் பேசுகிறேன் என்று. பகிர்தல் எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வளவு அழகானது என்பது அதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் அமைகிறது என்பதை உங்களின்எழுத்தில் காணலாம். உங்களின் எழுத்துகள் மிகவும் வலிமையானது. வலைப்பக்கம் ஆரம்பித்த உடனேஎல்லாரையும் வசியம் செய்து எல்லோரையும் திரும்பி பார்க்க செய்தவர் நீங்கள். பாராட்டுகளுக்காக பலர் எழுதிக் கொண்டு இருக்கையில், எழுதுவது என் கடமை. வாசிப்பதும் வாசித்து எண்ணங்களை பகிர்வது உன் விருப்பம் என்று தான் தொடர்ந்த பணியினை தான் இல்லாத போதும் தொடர்ந்து ,பதிவுகளை வரச் செய்து தான் எடுத்த பணியினை சரியாக செய்தவர். ஹாட்ஸ் ஆப் டு யூ கணேசன். ஒரு எழுத்தாளனால் மடடுமே எண்ணி செய்ய முடியும் இவ்வாறு. உங்களது பின்னாளைய சில பதிவுகளை படித்துவிட்டு கருத்து சொல்லாமல் வந்ததற்காய் வருந்துகிறேன்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஒருவேளைநீங்கள் 50 வது பதிவு எழுதி கடற் பயணம் செய்யாமல் ஒருவேளை தரையிலேயே இருந்து இருந்தால் இன்னமும் முதல் பின்னூட்டத்தினை போட்டுவிட்டு நான் முதலா என்று கேட்டு இருந்து சாதரண வாசகனாய் ம்ட்டுமே இருந்திருப்பேன்.
தற்போது கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கீறிர்கள், திரும்பிய பிறகு என்றாவது ஒரு நாள் இந்த பகுதியினை படிக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் வாசகனில் என்னை தனியாக அடையாளம் காண செய்யும் என்ற நம்பிக்கையுடனுமதான் இந்த பதிவினை எழுதுகிறேன் ...
கற்றது கடலளவு
-----------------------------
நானும் கடற் பயணம் செய்தேன்
என் பாதம் நனையாமல்.
கண்களினால் கற்று
கரை தெரிந்தேன்.
கடல் விசித்திரமானது
அது அதிசியமானது.
உப்புத் தண்ணி
என் முகம் அறைந்து சொல்லியது
கடல் பல வரலாறுகளைகொண்டது
தன் ஒவ்வொரு துளியிலும்!
அனுபவிக்க கற்றுக்கொள்
கற்றது கடல் அளவு
எனைக் கொள்ளைக் கொண்டது
உலகளவு.

உங்களது தொடரில் பல அறிய, தெரியவேண்டிய விடயங்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் அதனை விட மிகவேகமாய் நினைவுக்கு வருவார்கள். "நட்ராஜ்,ஜோ,கேத்தரின், வில்லியம்ஸ்,ரோசானா, பட்ரீஷியா..ஆம் பட்ரீஷியா எனை மிகவும் பாதித்த நபர்.
பட்ரிஷியாவுக்கான எனது இந்த கவிதையும் எனக்கு பிடித்த என் எழுத்து..
இழத்தலும்,பெறுதலும்
---------------------
உன் அகம்,புறம் தெரியாது
நாளை உன்விரல் எனைப் பற்றாது
இருந்தும் எனை இழக்கிறென் முழுவதுமாய்..
என் உணவோ, உன் உடலோ
காரணமாய்த்தான் இருக்கிறது
ஒவ்வொரு கணமும்...

அவரது நன்றி அறிவிப்பு இவ்வாறுதான் இருக்கிறது
"எனக்கு கடலை அறிமுகம் செய்த திரு. 'கடலோடி' நரசய்யாவுக்கும், என்னைப் பத்திரிக்கையாளனாக உருவாக்கிய ஆனந்த விகடனுக்கும் (ஜூனியர் விகடனுக்கும்), என் வாழ்க்கைப் பாதையில் என் மீது நிஜமான நேசம் காட்டிய எல்லோரின் அன்பிற்கும் எனது நன்றி.
கற்றது கடலளவு தொடரை வலைஉலகத்தில் பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் இனிய அனுபவம். இத்தொடர் நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தி மன நிறைவை அளித்துள்ளது. வலையுலக நண்பர்கள் கடிதங்களின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் அளித்த ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் என் வாழ்வில் எல்லாக் கட்டங்களிலும் துணை நின்று என்னை வழி நடத்தியவர்கள். இந்தத் தொடர் இணையத்தில் வெளியான போதும் நான் இல்லாதபோது தொடரைத் தொடர்ந்து தவறாமல் பதிவிட்டவர்கள் என் அன்பு நண்பர்கள்தான்.. அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியமற்றது.. அவர்கள் என் வாழ்வில் எப்போதும் துணை நின்று வழி நடத்துபவர்கள்.. இருந்தாலும் என் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் விரைவில் புதிய அனுபவங்களுடன் இன்னொரு தொடர் வழியாக உங்களை சந்திக்கும் வரை..
என்றும் அன்புடன்கடல்கணேசன்.
ஆகவே, தங்களது கடற்பயணம் நன்றாய் அமைந்து, இன்னும் வேறு சில அனுபவங்களை மீண்டும் ஒரு தொடராய்எழுதும் போது அதனை வாசிக்கும் வாசகனாய் காத்து இருக்கிறேன்.
வலைப்பக்கம் : http://kadalganesan.blogspot.com/
நன்றி கணேசன்..,

Tuesday, February 13, 2007

காதல் செய் பிறைக்காலம் முழுமையும்..,


நான் நிலாப்பெண்
நீ பூமியின் பையன்..

நான் உன் பெண்
நீ எந்தன் ஆண்

நான் உன் காதலி
நீ எந்தன் காதலன்.

ஊரே எனைப் பார்க்கையில்
நானோ உனைத் தேடிப் பிடித்து,
சிறுகச் சிறுக காண்பித்து, வெட்கமுற்று,
இரண்டாம்பிறை, மூன்றாம்பிறையென
என் காதலின் நிலை உணர்த்துகிறேன்.
ஆனால், நீயோ பார்க்க மறுத்து
தூங்கிப் பொழுதை கழிக்கிறாய்...

எனக்கு தெரிந்த காதல்
உனக்கு தெரியாமற் போனதெப்படி?

ஆம் நான் இயற்கைப் பெண்,
இயற்கை பெற்றெடுத்தவன்தானே நீ
உனக்கு எப்படி தெரியும் என் காதல்?

எனது வாழ்க்கை அர்த்தமுற
உனது காதல் வேண்டும் எனக்கு ,
பூமிப் பந்தினை எட்டி உதைக்கும் வீரனாய் மாற
எனது காதல் வேண்டும் உனக்கு
ஆதலால் காதல் செய்...

நான் இப்போது தேய்கிறேன்
அமாவாசையாய் என் வெறுமை தெரியும்.
நான் இல்லாது இருத்தல் என் நிலை உணர்த்தும்
என் காதல் உணர்வாய்
நீ சாக ஆரம்பிப்பாய்...

உனை உயிர்ப்பிக்க
மீண்டும் வருவேன்
பெளர்ணமியாய்
என் முழுமை உணர்த்துவேன்
காதலாய் கசிந்துருக என்னவனாய் தயராய் இரு ...
எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்
அன்பெனும் மைகொண்டு நான் ...

நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதாலால் நீ எனைக் காதல் செய்

மீண்டும் மீண்டும் தேய்ந்து,வளர்ந்து
நான் இன்னமும் அதிகமாய் உன்னில் காதலுறுவேன்
உனக்கு காதல்நிலை உணர்த்துவேன்
என் வாழ்நாள் முழுமையும்...

ஆம் நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதலால் நீ எனைக் காதல் செய்
பிறைக் காலம் முழுமையும்...

Monday, February 05, 2007

தலைவியின் புகழ் பாடி

200 பதிவு கண்ட தலைவியின் புகழ் பாடி ஒரு தொண்டனின் குரல்.

கி.பி. 2005,நவம்பர் திங்கள் 5ஆம் நாள் இந்த வலையுலகிற்கு அடியெடுத்து வைத்து, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தமிழ் தொண்டாற்றி வரும் எங்களின் தலைவி(வலி), எண்ணங்களின் அரசி, தானே தலைவி(தலைவி என்று தானே கூறிக்கொள்ளுவதால், இன்று முதல் தானைத்தலைவி இனி தானே தலைவி) கீதா சாம்பசிவம் அம்மா அவர்கள் (அது என்ன உங்களுக்கும் பச்சைகலர் பிடிச்சுருக்கு) 200 பதிவுகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார்கள். அவர்களது கரங்களுக்கு தங்கப் பேனா பரிசு அளிக்கலாம் என்று தான் எண்ணினேன். ஆனா தலைவி இப்ப எல்லாம் தங்கமும் பிடிப்பது இல்லை,பேனாவும் பிடிப்பது(கையில) இல்லை என்று கூறியதால் தலைவிக்காக , இந்த "இருக்கு ஆனா இல்லை கீ போர்டை "(Bluetooth Laser Virtual Keyboard)

உங்களின் பொற்பாதங்களில்..சீ. உங்கள் பொற்கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இனி உங்களின் கரம் பட்டு இந்த கீ போர்டு புனிதம் அடையட்டும்.இனி உங்கள் பதிவை மட்டுமா தேடப்போறீங்க..இந்த கீபோர்டையும் சேர்த்து தேடி முடிந்தால் பதிவுகளை இட்டு எங்கள் head letter ஐ நீங்கள் கேள்விகுறி ஆக்கலாம். அப்புறம் கட் அவுட் வைக்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் நாள் எஸ்கேப் ஆகலாம் என்று நினைத்து தலைவியிடம் சொன்னால் தலைவி அப்ப அப்ப போஸ்ட போட்டு எங்கடா கட்-அவுட்னு மிரட்டல் வேற பன்ன ஆரம்பிச்சுட்டாங்க.. சரினு கட்-அவுட் வைக்கலாம்னு முயற்சி பன்னினா இங்க சின்சினாட்டில இருக்குற மக்களுக்கு கட்-அவுட் கலாசாரம்னா என்னனு தெரியவில்லை. ஒரு பாலாபிசேகம் பண்ண முடியல. சே என்னடா உலகம் இது என்று மனம் வெதும்பி, இந்த கலாசாரம் தெரியாத இடத்தில் வைத்து என்ன புண்ணியம் என்று நினைத்து, கட்-அவுட் கலாசாரம் புரிந்த சிங்கார சென்னையிலோ அல்லது தலைவியினை நமக்கு அளித்த மதுரை மாநகரிலோ வைக்கலாம் என்று முடிவு பண்ணி கட் அவுட் பணியினை தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளேன். இப்போதைக்கு எதோ இந்த தொண்டனால் விடாது பனிமழையிலும் அடாது தலைவியின் புகழ் பரப்ப எனது கரங்களலால் இந்த MS-PAINT பேனரை

பனிமலைக்கு பக்கத்தில் நட்டுவிட்டு வந்துள்ளேன்...தலைவி வாழ்க..அவரது தமிழ்த் தொண்டு வாழ்க வாழ்க..

ஓகே. ஓகே, தலைவிக்கு ரொம்ப புகழ் பிடிக்காது..அதனால் புகழ்ந்தது போதும் என்று இத்துடன் நிறுத்தி கொண்டு விசயத்திற்கு வருகிறேன்..

உங்களின் பக்கங்களை சில மாதங்களுக்கு முன்னால்தான் வாசிக்க ஆரம்பித்தேன். 200 பதிவுகள் முழுவதும் படித்தது இல்லை(அப்பாட நீ தப்பிச்சனு நாட்டாமை சொல்வது காதுல கேட்குது) ஆனால் படித்த சிலதில் தெரியாத பல கண்டு ,உங்களின் எழுத்தின் ரசிகனாய் ,படித்து சந்தோசபடும் ஒருவனாய் இந்த சில காலங்களில் மாறிவிட்டேன்...

மனதின் வெளிப்பாடுகளாய்
தெளித்து விட்ட உங்களின்
எண்ணங்கள்
காலத்தின் குறியீடுகளாய்
நுற்றாண்டுகளுக்கு அப்பாலும்!!!


இன்னும் நிறைய எழுதுங்கள், வாசிக்க காத்து இருக்கிறோம் இக்காலத்தில் நானும்,
இன்னுமொரு காலத்தில் யாரொ ஒருவனும்..

வலைப்பக்கம்:
எண்ணங்கள்