Thursday, March 29, 2007

இங்கேயும் வியர்டு (படிக்க)கிடைக்கும்

புயலாய் பி.மு.க கட்சியில் நுழைந்த கோபி எனக்கு ஒரு வலை(வீட்டு)வேலை குடுத்தார். உன்கிட்ட இருக்கிற வியர்டான விசயம் என்னனு கொஞ்சம் தமிழ் கூறும் நல்உலகத்துக்கு எடுத்துசொல்லுப்பா அப்படினு. ஆனா நாம வழக்கம்போல ஆணிய பிடுங்கிட்டு(இல்ல அப்படி பிடுங்கின மாதிரி நடிச்சிட்டு) இருந்ததுல எழுதறததுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு. தாமதத்திற்கு வருந்துகிறேன் கோபி.சரி விசயத்துக்கு வருவோம். வியர்டுனா என்ன அது நமக்கிட்ட இருக்குதானு தேடிப் பார்த்து சொல்லுவோம்னு பார்த்தா, நான எங்க வீட்டுல பிறந்ததே வியர்டுதான் அப்படிங்கிறத தவிர வேற ஒன்னும் தேறமாட்டேன் என்கிறது... ஆனாலும் விடுவோமா ... தெரியாதத தெரியும்னு சொல்லி வேலை பார்க்கிற நமக்கு இது என்ன புதுசா என்ன. தேடிக் கண்டு பிடித்து இதோ....


வியர்டு 1 : வாசித்தல்:

எவன்டா இவன் இதப் போய் வியர்டு சொல்ரானேனு நீங்க சொல்றது கேட்குது..ஆனா, வாசித்தல் அப்படினு நாம சொன்னது கதை புத்தகத்த எப்படி வாசிக்கிறது அப்படிங்கிறதுதான். சின்னபுள்ளையா இருக்கிறப்ப வீட்ல கதைபுத்தகம் படிக்க விடமாட்டங்க. ஆனா நமக்கு அத படிக்காம இருக்க முடியாது.. என்ன பன்றது எப்படியாவது படிச்சே ஆகனும் இல்லைனா சோறு தண்ணி இறங்காதே.நான் எங்க வீட்ல மத்தவங்க யாரும் பண்ணாத நான் செய்ய ஆரம்பித்தேன்.பாட புத்தகத்த எடுத்து வைச்சுகிட்டு அதுக்குள்ள மறைச்சு வைச்சு காமிக்ஸ புத்தகம் படிக்க ஆரம்பித்ததேன். இன்ன வரைக்கும் அவங்கனால அத கண்டு பிடிக்க முடியல. அப்படி தொடர்ந்த அந்த வாசிப்பு அப்புறம் அப்படியே மற்ற எல்லாவகையான கதைபுத்தகத்திலையும் கொண்டு போய் விட்டுடுச்சு.அதுல முக்கியமானது இந்த ஆனந்த விகடன் படிக்கிறது. ஆவி படிக்கிறதுல நான் ஒரு பைத்தியமாகவே மாறிப் போனேன். புத்தகம் வாங்கியதும் அதனை திறத்து, அந்த புத்தகத்தின் வாசத்தினை முகர்ந்த பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். படிக்கிறது எப்படி ,கடைசிப் பக்கத்தில் இருந்து முந்தைய பக்கத்திற்கு வருமாறுதான். அது அப்படியே இன்னமும் தொடர்ந்து இப்ப எல்லா புத்தகத்தையும் பின்னாடி இருந்துதான் படித்து வருகிறேன்.


வியர்டு 2:இருளும் தனிமையும்:

அது என்னமோ தெரியல ,எனக்கு இந்த இருள் ரொம்ப பிடிக்கும் . ஒரு வேளை கருமைதான் எனக்கு பிடித்த கலர் என்பதாலாவோ என்னவோ இருளில் தனியாய் இருக்க பிடிக்கும். மின்சாரம் போனதுனா ஊரே வருத்தபடுவாங்க..ஆனா நான் மட்டும் சந்தோச படுவேன். மெழுகுவர்த்தியோ, விளக்கோ எல்லாரும் தேடிகிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் தனியா என் அறையில் படுத்து கொண்டு சத்தமாய் பாட்டு பாடிக் கொண்டு இருப்பேன்.(குரல் நல்லா இருக்குமா அப்படினு எல்லாம் நீங்க சாதரணமாய் யோசிக்க கூடாது.ஏன்னா நான் தான் வியர்டாச்சே.)இப்பவெல்லாம் பாட்டு பாடுறத விட பாட்டு கேட்கத்தான் பிடிக்குது..இந்த மாதிரி சூழ்நிலைக்குனே என்கிட்ட ஒரு பாட்டு பட்டியலே இருக்கு.உ.ம் : காக்கை சிறகினிலே..., ஏழாவது மனிதன் படத்திலிருந்து மற்ற எல்லா பாடல்களும், பூவே செம்பூவே..., தேவதை இளம் தேவதை,பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய் ன்னு.....நீண்டு கொண்டே போகும் .எனவே தனியாய், இருளில் பாட்டு பாடிக்கொண்டே(பக்கத்துல இருக்கறவங்கள பத்தி கவலை படாம),அல்லது கேட்டுக்கொண்டே இருக்க பிடிக்கும். மொட்டை மாடில படுத்துகிட்டு வானத்த பார்த்துகிட்டு இருக்கிறப்ப அந்த இருள் அழகு.


வி.டு 3: மழையில் நனைதல்:

ச்சோ என்று பெய்யும் மழையானாலும் சரி, சிறு சாரலாய் இருந்தாலும் சரி மழையில நனைய சந்தோசம். எப்படா மழை வரும் அப்படினு காத்து கிட்டு இருப்பேன். மழை வந்தது அப்படினா விடு ஜீட்.. அப்படியே மழையில போய் நனைஞ்சுகிட்டு ஊரெல்லாம் சுத்தி, தொப்பல் தொப்பல வீட்டுக்கு வந்து நின்னு அம்மா கிட்ட திட்டு வாங்கினோம் அப்படினா அது வாழ்க்கை.இப்பத்தாண்ட நீ இயற்கையின் காதலன் அப்படினு எனக்கு நானே சொல்லிக்கிட்டு திரிவேன். நனைதல் கொஞ்சம் கொஞ்சமாய் வேறு படத் தொடங்கியது . முதலில் மழையில் நனைந்து நடக்க பிடித்தது.பிறகு நனைந்து கொண்டு அப்படியே வந்து அம்மா கிட்ட காபி கேட்டா அவங்க இல்லைனு சொன்னதுக்கு அப்புறம் திரும்பவும் பக்கத்தில இருக்கிற டீக் கடைக்கு போயி சுடச்சுட காபி குடிக்கிறது. மழையில நனைஞ்சிட்டு அப்படியே ஐஸ்கீரிம் பார்லர் போய் ஐஸ்கீரிம் சாப்பிடுறதுனு மாறிகிகிட்டே இருக்கு

வி.டு 4: குலைச்சு அடிக்கிறது.

சாப்பிடறதுல எனக்கு நிகர் நானே தான் . அதுவும் எங்க வீட்ல கொஞ்சம் மக்கள்தொகை அதிகம்(இத பத்தி ஒரு தனிப் பதிவு விரைவில்ல்ல்ல்).அதுனால முன்னே யாரு வராங்களோ அவங்க அதிர்ஷ்டசாலி .ஆனா என் அண்ணாவுக்கு மட்டும் அம்மா தனியா எடுத்துவைச்சுடுவாங்க.. நம்மள மட்டும் எனோ மதிக்க மாட்டாங்க..சரி சரி விசயத்துக்கு வரேன். நாம எப்பவுமே தனியா சாம்பார் ஊத்தி சாதம் சாப்பிட்டாலும் இந்த சாம்பரோட தயிர் சேர்த்து சாப்பிடுறது தனி ருசி.இட்லி அப்படினா தேங்காய் சட்னியும் தக்காளி குருமாவையும் ஒன்னா குலப்பி அடிக்கிறது, கறி குழம்போட ரசம் சேர்த்து சாப்பிடுவது, தேனீரோடா பருப்புவடை(இத எங்க ஊர்ல ஆமை வடைனு சொல்லுவாங்க. ஏன் இப்படி பேர் வந்துச்சுனு நிறைய நாள் யோசிச்சு யோசிச்சு .... என்ன நடந்தது ஒன்னும் நடக்கல இன்னும் யோசிக்கிறேன்) சாப்பிடுறது தேனீர் ஒரு வாய், வடை ஒரு வாய்னு இப்படி ஒன்னோட ஒன்னு இணைத்து சாப்பிடறது நம்மகிட்ட இருக்கிற இன்னொரு வியர்டு விசயம். ஆனா இது நம்ம வீட்ல மட்டுமே செயல் படும்கிறதுனால நடைமுறை சிக்கல் இருக்கு..


வி.டு 5: 5.1,5.2,5.3..,,,,???###

ஹி..ஹி .இன்னும் நிறைய விசயம் இருக்கு மக்கா. நீ பாட்டுக்கு 5 மட்டும் எழுதுனு சொன்னா நான் என்ன பன்றது. அதுனால இது கீழ்கண்டவாறு வகைபடுத்தப் பட்டுள்ளது

5.1 ரெளத்திரம்:
அதாங்க கோபம் .நமக்கு இது கொஞ்சம் அல்ல நிறையவே .இந்த முன் கோபம் ,பின் கோபம், நடு கோபம்னு எல்லா கோபமும் சரியான நேரத்தில வந்திடும். அம்மா கிட்ட இருந்து அடுத்த மனிதன் வரைக்கும் கோபம் கொந்தளிக்கிறது.என்னால கட்டுபடுத்த முடியாத விசயம் இது மட்டுமே. வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கொண்டு வரைவோலை வாங்கும்போது அந்த அலுவக நண்பர்(???) வீட்டுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ சம்பந்தமற்ற விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் போது கோபம் பொத்துகொண்டு வருகிறது அவரின் மேல்.அலுவலகத்தில் குழுமனப்பான்மை இல்லாத சக ஊழியனிடம் கோபம்,எப்போதெல்லாம் இலங்கையில் ஒரு தமிழ் குழந்தை அனாதையாகிறதோ அப்போது எல்லாம் புத்தரின் மேல் கோபம்,மிகைபடுத்தப் பட்ட செய்திகளை தரும் நாளிதழ்களின் மீது , என எல்லாரிடமும் சீக்கிரம் வரும் கோபம் என்னை விட்டு மெதுவாகவே செல்லுகிறது. எப்ப மாறுமோ?

5.2 நேர்த்தி:
நானாய் எடுத்துகொண்ட வேலையோ அல்லது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையோ அது நேர்த்தியாய் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் உழைப்பது. இதுவே எனக்கு சங்கடமாய் அமைந்த நேரங்கள் பல. ஆனாலும் நேர்த்தியாய் சிறப்பாய் குடுப்பதில் மெனக்கெடுவேன்.

5.3 பாசம்:
நான் ஒவர் செண்டினு என் எல்லாம் தெரிந்த தோழி திட்டிகிட்டே இருப்பா.நான் அதிகமாய் பாசமாய் இருந்து அதே மாதிரி அனைவரும் இருக்க வேண்டும் என எண்ணி அறிவால் முடிவெடுக்க வேண்டிய விசயங்களை மணத்தால் முடிவெடுத்து வருத்தமே உற்றாலும் பாசம் மட்டும் குறைய மறுக்கிறது எல்லாரிடமும்.


5.4 கடைசி நிமிட வேலை:

முன்னமே திட்டமிட்டு வேலைகளை வரைமுறை படுத்தினாலும் என் சோம்பல் காரணமாய் நாளை செய்வோம் என்று எனது நிறைய வேலைகள் கடைசி நிமிடத்திலெயே முடிக்கப் படுகிறது. இது மட்டும் மாறிட்டா......5.5.தனித்து இருத்தல்:
வெள்ளையாய் உலகம் இருப்பின்
அதனில் கரும் புள்ளியாய்
நான்.
சரியோ தவறோ
தனித்து இருக்கவே அசைபடுகிறென்
!!!@@@@@###.இப்படி எதாச்சும் கிறுக்கி மத்தவங்கள குழப்பறது....

இதுக்கு பேருதான் வியர்டானா நீங்க தான் சொல்லனும்.. கோபி வேலைய முடிச்சாச்சு. எதாச்சும் ஒரு செண்ட் பாட்டில பார்சல் செஞ்சுடு.. இப்பதைக்கு இது அவுட் ஆப் வலை உலகம் ஆயிடுச்சு. அப்படியே பார்த்தாலும நமக்கு தெரிஞ்ச மக்கள் எல்லாரும் அல்ரெடி எழுதியாச்சு.அருண் நீ மட்டும்தான் பாக்கினு நினைக்கிறேன்.எனவே உன்ன மட்டும் இப்ப கூப்பிடுறேன்.....

Wednesday, March 21, 2007

வழிந்தோடுகிறது வாழ்க்கை பிடித்தமற்று...

நீண்ட(2++++வாரம் ) இடைவெளிக்கு பிறகு திரும்பவும் வலைபக்கங்களில் மணி.மணி.மணி(எக்கோ)...
மக்களே எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளா நான் இந்த பக்கம் வருவது கிடையாது.வேலைப் பளுனு சொன்ன நீங்க நம்பவா போறீங்க. எல்லாரும் நிறைய எழுதி இருப்பீங்க.. எப்ப படிக்கறது????? எப்படி பின்னுட்டம் இடுறது?????
உளறல்(கவித கவித...) ரிலே என்ன ஆச்சுனு தெரியல..யாரு இப்ப உளறிகிட்டு சீசீ ஓடிக்கிட்டு இருக்காங்களோ? இப்ப கவித மாதிரி சொல்லி இருக்கிறது தான் என் கடந்த வார வாழ்க்கை.. அப்புறம் பாசக்கார கோபிநாத் எனக்கொரு ஹோம் ஒர்க் கொடுத்து இருக்காரு.அத ஆராய்ச்சி பண்ணி எழுதனும். சோ, கோபி சாமி எனக்கு கொஞ்சம் டைம் கோடு சாமி..


இயக்கிவிடப் பட்ட
மின்விசிறியாய் சுழலுகிறது
வாழ்க்கை...

கழட்டி எறியப்பட்ட ஆடைகள்
அதனதன் வியர்வை வாசங்களை சுமந்துகொண்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
என் கலைந்துபோன அறையில் ...

மூன்று முறை புதுப்பிக்கப்பட்டும்
படிக்க முடியாமல் போவதை
நினைவுறுத்தியது
நூலக புத்தகத்தின்
முனைமடங்கிய பக்கம்..

எப்போதோ எழுதி வைத்த தலைப்பு
தானாய் கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறது
காற்று வெளிகளில்
விரல்களில்லாமல்...

இருக்கையே படுக்கையாகி அதில்
உறங்கிப்போன பொழுதில்
முகத்தில் அறையும் சூரியனை
காண்பிக்க மறுத்துவிட்டது
என் கைபேசியின் அலாரம்...

உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...Wednesday, March 07, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்

வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் காதல்.

அதன் காரணமாய்
விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு
மெளனமாய் உன் பெயர் சொல்லி..

என் இமைமூடிய பொழுதுகளில்
உந்தன் பெயரை உரக்கச் சொல்லியதற்கு
ஊர் சொல்லுகிறது நான் உளறுகிறேனாம்
ஊருக்கு எப்படி தெரியும்?
இது உள்ளத்தின் வேலை என்று.

ஆம் மரபுகாரர்களுக்கு எப்படித் தெரியும்
புதுக்கவிதை?

என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து

என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே

உன்னை உள் வாங்கி
என்னை விடுத்து
சுவாசம் செய்கிறேன்
உயிரும் வாழுகிறேன்உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
விழி விழுந்து என் விதி பார்த்து
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....

குறிப்பு

கடைசி பாரா வின் ஓவ்வோரு வரிகளையும் கிளிக் செய்தால் தொடர் ஓட்டத்தினை பார்க்கலாம்.


தொடர் ஒட்டத்தில்
---------------------------------
தலைவர் :
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
நிதியமைச்சர் :
விழி விழுந்து என் விதி பார்த்து
து.முதல்வர் :
உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
நான் :
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்