Sunday, April 29, 2007

அசுரனும் அழகுதான்

அழகுகளை பார்த்து, ரசித்து,உள்வாங்கி,அனுபவித்து அதனை அழகாய் எழுதியும் காண்பித்த பிரியா அழகாக இரண்டு நபர்களை (பொற்கொடியையும்,
சத்யபிரியனையும்) எழுத சொல்லிட்டு கடைசியில் இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.அதான் என் மேல ஒரு அதீத நம்பிக்கையில் அசுரனும் அழகுதான் தலைப்பு வைச்சுட்டு நானும் அழகுனு(நீயே சொல்லிகிட்டாத்தான் உண்டுனு நீங்க சொல்றது எல்லாம் கேட்குது கேட்குது) சொல்லி இந்த உரையினை ஆரம்பிக்கிறேன்(இந்த கார்த்தி நம்பள அமைச்சரா அறிவித்ததில் இருந்து இப்படியே ஆயிடுச்சி. ஸ்ஸ்ஸ்ச்ச்ப்பா சோடா பிளீஸ்)

இந்த உலகத்தில் எல்லாமே அழகுதான்.உலகின் எல்லா பகுதிகளிலும்,எங்கேனும், எதோ ஒன்றாய் அழகு ஒளிந்தே உள்ளது. அது அஃறினையோ அல்லது உயர்தினையோ, இயற்கையோ அல்லது செயற்கையோ இல்லை வேறேதேனும் நிகழ்வுகளாகவோ இந்த பிரபஞ்சம் அழகாகத்தான் விரிகிறது.ஆனால் அதனை அனுபவிப்பதும்,அதன் அழகை உணர்வதும் ஒரு வகை கலை.அந்த உணர்வு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.ஆம், அதனால்தான் அசுரனும் என் கண்ணிற்கு அழகாய் தெரிகிறான்.

என் வீட்டு தொட்டிச்செடியினை
கடந்து சென்றபோது
எதிர் வீட்டுக்காரனின்
குரல் சொல்லியது
செடியில் பூத்த மொட்டுகள் அழகாம்..
செடியில் பூ இருந்ததா?
திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்

சன நெரிசலில் கரைந்து போகிறேன்...

இப்படி அழகை தவற விடுபவர்களின் கண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களை என்ன செய்வது?.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது? அவர்கள் சொன்ன அழகினில் சில நானும் அனுபவித்ததுண்டு.இன்னும் சில இனிமேல் அனுபவிக்கும் போது அழகாய் தெரியும்.அவர்கள் விட்டுவிட்ட நான் பார்த்திட்ட,அனுபவித்த அழகினை இங்கு தொட நினைக்கின்றேன்.

என் புலன்கள் உணர்ந்த பல அழகில் சில (ஆறு)


1. "ழ":

தமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து. பார்க்க மட்டும் அல்ல சரியாய் பேசும்போதும்,
அதன் உச்சரிப்பை கேட்கும் போதும் "ழ" அழகுதான்."ழ" என்ற ஒற்றெழுத்துவை மட்டும் இந்த வகைக்குள் அடக்க விரும்பவில்லை. "ழ" வை நான் பேச்சுத்தமிழோடு இணைத்தே பார்க்கிறேன்.கரகர குரலில் அழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுதல் அழகு. அது யாராக இருப்பினும்.(உ.ம்) கலைஞர்,வைகோ,பாரதிராஜா,வைரமுத்து,
பட்டிமன்ற பெண் பேச்சாளர் பாரதி(சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் வரும் பெண் பேச்சாளர். பெயர் சரியா? ஒருவர் காந்திமதி.இவர் இன்னொருவர்) வின் பேச்சுகள் அழகு.
யாழ் தமிழும் ,பிழை இல்லா கேரள தமிழும் மிக அழகுதான்.

2.கிராமத்து திருவிழா:


சண்டை போட்டவன் சமாதானமாகிப் போவதும், சமாதானமாய் இருந்தவன் சண்டையிட்டுக் கொள்வதும், மாமன், மச்சான்,அத்தை,சித்தப்பு,பெரியப்பு, அண்ணன்,தங்ககைகள்,அக்கா,தம்பிகள்,முறைப் பெண் என உறவுகளே ஊராய் திரியும் கிராமத்தின் திருவிழா அழகு. அந்தத் திருவிழா நாட்களில் கவலை மறந்து,வேலை மறந்து களிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கும் கிராமத்து திருவிழா அழகு.ஊர் முழுவதும் குழாய் மைக்குகள், தெருவெங்கும் தோரணங்கள், பெருசுகளின் அரட்டைகள், பறையாட்டம்,கரகாட்டம்,நாடகம்,கறிச்சோறு,மதுநெடி,மாமன்களின் கேலிப் பேச்சு, தாவனி கட்டிய முறைப் பெண்ணின் மஞ்சள் தண்ணி, என கிராமத்து திருவிழா அழகோ அழகு.

3.தீப ஒளி:

சூரிய ஒளி,நிலவின் ஒளி, மின்சார விளக்கின் ஒளி என எல்லா ஒளிகளும் வெளிச்சத்தினை கொடுத்தாலும்,பிரகாசத்தினை தந்தாலும் மிக அழகாய் தெரிவது தீப ஒளியே. என் தோழியின் மூலமாய் நான் உருவ வழிபாடுகளை விட்டு விலகி இருந்த காலங்களில் ஒளியின் மீது இன்னமும் காதல் பிறந்தது. சிலைகளற்ற இடத்தில் வெறும் விளக்கினை மற்றி ஏற்றி ,அதன் சுடர் பிரகாசம் மனதுக்குள் என்னவோ செய்யும் ஒன்று.கார்த்திகை மாதங்களில் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் விளக்கினை ஏற்றி வைக்கும்போது அது நின்று எரியும் அழகினை நானும் நின்று ரசித்திருக்கிறேன்.அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு. மாதா கோயிலின் மெழுவர்த்தி உருகி கரைந்திடுகையில் அதன் அழகு இன்னமும் கூடும்.

4.போராளிகள்:


தனக்கு பின்னால் தன் சமூகம் நலம் பெற வேண்டும்,தான் அனுபவித்த நச்சுக் காற்று மறைந்து தன் சந்ததியினர் நல்ல காற்று சுவாசிக்க வேண்டும் என்பதற்காக போராடும் எல்லா போராளிகளும் அழகானவர்கள்.தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.

5.வெள்ளை வேட்டி/சட்டை/மீசை:

அது என்னமோ தமிழனுக்கு ஒரு கர்வத்தினையும்,அழகினையும் தருவதில் இவைகளே முதலிடம் என்று சின்ன வயதிலிருந்தே ஒரு அழமான நம்பிக்கை.எனக்கு வேட்டி கட்ட சரியாக தெரியாவிட்டாலும் ஒவ்வோரு பண்டிகையின் போதும் நானும் விடா முயற்சியாய் வேட்டி அணிந்துகொள்வேன்.எஜமான்,நாட்டாமை(சியாம் நீங்களும் இப்படித்தான் முறுக்கு மீசை வச்சு,வெள்ளை வேட்டி எல்லாம் கட்டி இருப்பீங்களா?),கிழக்கு சீமையிலே மாதிரியான படங்களை பலமுற நான் பார்த்ததுக்கு இந்த வேட்டி சட்டையும் மீசையும்தான் காரணம். அப்புறம் மீசை. என் அரும்பு மீசை வளரத்தொடங்கியதில் இருந்தே என்னில் அழகாய் நான் கானுவது என் மீசையினைத்தான். பாரதியின் மீசை, எனது அப்பாவின் மீசை என அழகாய் தெரியும் மீசைகள் ஏராளம்.அதே மாதிரி உல்லாசம் படத்தில் விக்ரமின் மீசைக்காகவே "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா "பாடலை பலமுறை பார்த்துள்ளேன். காதல் மன்னன்,உயிரோடு உயிராக படக் காலத்தில் வரும் அஜித்தின் மீசை அழகானது.


6.

என் அன்றாட பொழுது:

அதிகாலை காபி,
அந்திமச் சூரியன்,
அம்மாவின் புண்ணகையினில் மறையும் அவள் கண்ணத்து கோடு,
சாய்வு நாற்காலியில் செய்திகளுடன் உறங்கும் அப்பா,
பழசாகிப் போன பைக்,
இரைச்சலாய் இயங்கும் நகரம்,
டிராஃபிக் சிக்னலில் காணும்
சேலை கட்டிய தேவதைகள்,
எதிர்பாரமல் சந்திக்கும் பள்ளிக் கால நண்பன்,
சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா,
காதில் கரையும் இனியே மெல்லிசை,
உறங்குவதற்கு முன் ஒருமுறையேனும்
நினைத்துவிடும் முதற்காதல்
என இவற்றில் ஏதேனும் ஒன்று
கூடியோ அல்லது குறைந்தோ
அழகாய்த்தான் இருக்கிறது

என் அன்றாடப் பொழுது

சாலையோரக் குழந்தையின்
புண்ணகையினை சுமந்து கொண்டு....

பிரியா, எதோ எனக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு பட்ட ,அனுபவித்த, நம் நண்பர்கள் எழுதாத அழகினை எழுதியுள்ளேன். அதுவும் மிகவும் தாமதமாக.இதற்கு அப்பாலும் இதைப் பத்தி எழுத நம்ப நட்பில யாரும் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியாரவது இருந்தீங்க அப்படினா நான் டேக் பண்ணினதா நினைச்சு எழுதிடுங்க.

'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்"னு நான் எங்கேயோ கேட்டது. அது அப்படியே எல்லாருக்கும் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...